June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பள்ளிகளில் திருக்குறளுக்கு என்று தனிப் பாடவேளை ஒதுக்க வேண்டும்: திருக்குறள் விழாவில் பேச்சு

வந்தவாசி, மே 12:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைகால இலவச பயிற்சி வகுப்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் மற்றும் குறள் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் மா.மங்கையர்க்கரசி தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பொன்.ஜீனக்குமார், வெண்குன்றம் ஊராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் க.வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் கு.ஜெய்சங்கர் கலந்து கொண்டு ‘திருக்குறளின் மேன்மை ‘ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் திருவள்ளுவர் வேடமணிந்து திருக்குறள் வாசித்த மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பரிசுகளை வழங்கப்பட்டது. மேலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும், திருக்குறளுக்கு என்று பள்ளிகளில் தனிப் பாடவேளையை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், வந்தவாசியில் திருவள்ளுவர் சிலை அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கவிஞர் பூங்குயில் சிவக்குமார், சமூக ஆர்வலர் வி.விஜயகுமார், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க நிர்வாகி கேப்டன் மு.பிரபாகரன், தலைமை ஆசிரியர் சக்ரவர்த்தி, முதுகலை ஆசிரியர் ராமஜெயம், கபிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, இரட்டைவாடை செட்டி தெருவில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் ஆக்ஸ்போர்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் மைய நிர்வாகி கு.சதானந்தன் நன்றி கூறினார்.