July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோவை

“2047 இந்தியா நம் அனைவரின் கனவு; அர்ப்பணிப்புடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்” – கோவையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

“அவசரநிலை மீண்டும் வரக்கூடாது; காலனித்துவ மனப்பான்மையில் இருந்து அதிகாரிகள் வெளியே வர வேண்டும்” –

கோவை அவிநாசி சாலையில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கலந்து கொண்டு மையத்தை தொடங்கி வைத்தார். விழா வந்தே மாதரம், தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற வரிசையில் பாடல்களுடன் தொடங்கியது.

விழாவில் பேசிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், தமிழ்நாட்டில் இந்த ஐஏஎஸ் பயிற்சி மையம் தொடங்கப்படுவது பெருமைக்குரிய நிகழ்வாகும் என்றார். நாட்டின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டிய காலம் இது என்றும், நாட்டிற்கான அர்ப்பணிப்பு உணர்வுடன் நிர்வாக அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், ஒரு சில அதிகாரிகள் அந்த உணர்வுடன் செயல்படுவதில்லை என்றும், நாட்டின் வரலாறு மற்றும் பண்பாட்டை ஆழமாக அறிந்து அதிகாரிகள் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்றும் கூறினார். 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது நம் அனைவரின் கனவாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, அவசரநிலை கால அனுபவங்களை நினைவு கூர்ந்ததை சுட்டிக்காட்டிய ஆளுநர் அவசரநிலை காலத்தில் தனது தந்தையுடன் தாமும் சிறையில் இருந்ததாகக் குறிப்பிட்டார், அப்போது திறமையான மற்றும் சுதந்திரமான நிர்வாக அமைப்பு இருந்திருந்தால் அவசரநிலை போன்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.

நாட்டிற்கு வலுவான நிர்வாகத் துறை மிகவும் அவசியம் என்றும், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வி முறை அதிகாரிகளை உத்தரவுகளை மட்டும் நிறைவேற்றும் மனப்பான்மைக்கு பழக்கப்படுத்தியது என்றும் அவர் விமர்சித்தார். “குனியச் சொன்னபோது குனிவதற்குப் பதிலாக ஊர்ந்து சென்றோம்” என்ற வரலாற்றுச் சொல்லை மேற்கோள்காட்டி, அதிகாரிகள் சுயசிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

நம் நாட்டின் புவியியல் குறித்து பலருக்குத் தெரிந்திருந்தாலும், அதன் வரலாறு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மக்களுக்கு சேவை செய்யும் உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதிகாரிகள் அனைவரிடமும் மனிதநேயத்துடன் அணுகி செயல்பட வேண்டும் என்றும், அரசியல்வாதிகளும் தேவையான இடங்களில் சரியான முடிவுகளை எடுக்கத் துணிவுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

காலனித்துவ மனப்பான்மையிலிருந்து வெளியே வந்து, நாட்டிற்காக பணியாற்றும் உறுதியான எண்ணத்துடன் நிர்வாக அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும், “இறைவன் அல்லது விதி மக்களுக்கு சேவை செய்ய என்னைத் தேர்ந்தெடுத்துள்ளது” என்ற மனநிலையுடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், நிர்வாகத் துறை அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது அவர்களின் திறமையையும் அர்ப்பணிப்பையும் காட்டுவதாகக் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களை விட பயிற்சி மையங்களில் அதிக நேரம் செலவிட்டாலும், அவர்களின் திறமையில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

சிவில் சர்வீஸ் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தலைமுறையின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கிறீர்கள்; அந்த மாற்றமே நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்றார்.

மாவட்டச் செய்தியாளர்
C. சத்யா