June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காரசார விவாதம் ஏதுமின்றி முடிந்த ஈரோடு மாநகராட்சி கூட்டம்..

ஆண்டின் இறுதி நாளில் நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் மௌனம்..

வழக்கம்போல் வெளியில் கிளம்பிய அதிமுகவினர்..

ஈரோடு. ஜன 01

ஈரோடு மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாதத்தின் கடைசி நாட்களில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் மாமன்ற கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி ஈரோடு மாநகராட்சியின் டிசம்பர் மாதத்தின் மாதாந்திர சாதாரண கூட்டம் நேற்று டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற்றது. மாதத்தின் கடைசி கூட்டம் என்பதோடு, 2025 ஆம் ஆண்டின், ஆண்டு கடைசி கூட்டமாகவும் நேற்றைய கூட்டம் அமைந்தது.

கூட்டத்திற்கு மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். ஆணையாளர் அர்பித் ஜெயன், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியவுடன் வழக்கமான தனது திருக்குறள் உரையை மேயர் வாசித்தார்.

பின்னர் கூட்டம் தொடங்கியது. எப்பொழுதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஈரோடு மாநகராட்சி கூட்டம் நடைபெறும்.

ஆனால் ஆண்டு இறுதி நாளில் நடைபெற்ற நேற்றைய மாநகராட்சி கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் எதுவும் பேசாமல் அமைதி காத்தனர்.

தனது ஆவேச குரலால் மாநகராட்சி நிர்வாகத்தின் குறைகளை சுட்டிக்காட்டி கோபம் கொப்பளிக்க அதிக சத்தத்தோடு பேசும்,4 வது மண்டலக்குழு தலைவர் குறிஞ்சி தண்டபாணி அவையில் அமைதியாக அமர்ந்திருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் மைக்கை பிடித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இதேபோல் பல்வேறு கவுன்சிலர்களும் பல்வேறு குறைகளை முன்வைத்து மாநகராட்சி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை அடக்கி பொறி பறக்க பேசும் கவுன்சிலர்களும் அமைதியாகவே நேற்றைய கூட்டத்தில் இருந்தனர்.

இந்தக் கூட்டம் தொடங்கியவுடன் 1 வது மண்டல குழு தலைவர் பி கே பழனிசாமி எழுந்து, ஈரோட்டில் இருந்து சென்னை வரை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம் குறித்து பேசி, முதல்வர், துணை முதல்வர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

திமுகவில் பல பொறுப்புகளை வகித்து வரும் 1 வது மண்டல குழு தலைவர் பி கே பழனிசாமி கோபத்தோடு எப்பொழுதும் குறைகளை. ஆனால் நேற்றைய கூட்டத்தில் குப்பை அள்ளுவது குறித்தும், குப்பை வண்டிகள் பற்ற குறையை மட்டும் பேசிவிட்டு அமர்ந்து விட்டார்.

அதேபோல் வழக்கமாக கூட்டம் தொடங்கியவுடன் கையில் ஆதாரங்களை எடுத்துக் கொண்டு ஆவேசமாக பேசும் காங்கிரஸ் பென் கவுன்சிலர் சபூர் ராமா சாதிக் பாட்சா நேற்றைய கூட்டத்தில் இரண்டு கோரிக்கைகளை மட்டும் முன் வைத்து விட்டு அவரும் அமைதியானார்.

தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் தங்கமுத்து, ஜெகதீஷ், பாரதி உள்ளிட்ட சிலரும் மென்மையான நடையில் தங்களின் குறைகளை சொல்லிவிட்டு வழக்கம்போல் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து வெளியே கிளம்பி சென்று விட்டனர்.

மொத்தத்தில் ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் எப்பொழுதும் காரசார விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் இறுதி நாளில் நடைபெற்ற ஆண்டின் இறுதிக் கூட்டம் அமைதியாக நடைபெற்றது. கவுன்சிலர்கள் அனைவரும் மௌனம் காத்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இந்த ஆண்டு 2026 ஜனவரி மாதம் இறுதியில் நடைபெறும் கூட்டம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கூட்டத்தில் உதவி ஆணையாளர் தனலட்சுமி, மாநகர பொறியாளர் கோ. முருகேசன், நகர் நல அலுவலர் கார்த்திகேயன், மற்றும் மண்டல குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த கையோடு 2026 ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் அலுவலகத்தில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடப்பட்டது.