2 இருசக்கர வாகனங்கள், பட்டாகத்தி பறிமுதல்; போலீசார் தீவிர விசாரணை
திண்டுக்கல், ஜூலை 1:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் 5 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு பட்டாகத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், இரவு நேர வழிப்பறி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் அனைத்து காவல் நிலையங்களிலும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதிகுமார் தலைமையில், சார்பு ஆய்வாளர் பாண்டியன் மற்றும் காவலர்கள் செவ்வாய்க்கிழமை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கெச்சாணிப்பட்டி குளம் அருகே ஐந்து பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனங்களுடன் நின்று கொண்டிருப்பதைக் கண்டு போலீசார் அவர்களை கண்காணித்தனர். போலீசாரைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. உடனடியாக செயல்பட்ட போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் செல்வபாண்டி (23), இளையராஜா (22), ஆனந்தசுகன் (28), தங்கப்பாண்டி (27), நந்தகோபால் (30) என்பதும், அவர்களிடம் பட்டாகத்தி இருந்ததும் தெரியவந்தது. மேலும், அந்த பகுதியில் வரும் பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டு காத்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு பட்டாகத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் வடமதுரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரின் பின்னணி, அவர்கள் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளனவா, வேறு மாவட்டங்களில் வழிப்பறி அல்லது கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா, மேலும் இந்தக் கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்கள் உள்ளனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரோந்து பணி தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்