சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்விக் கனவு தகர்வு – மலைக்குறவர் இன மக்களின் கண்ணீர் மனு
‘விஜய் மாமா எங்களுக்கு உதவி செய்யுங்கள்’ – பள்ளிச் சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்
கிருஷ்ணகிரி, ஜூன் 30:
“திறமை இருக்கிறது… மதிப்பெண்களும் இருக்கின்றன… ஆனால் சாதிச் சான்றிதழ் இல்லை என்பதற்காக எங்கள் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது” என்ற வேதனையுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் கலர்பதி கிராமத்தைச் சேர்ந்த மலைக்குறவர் சமூக மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலர்பதி கிராமத்தில் வசிக்கும் மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பல குடும்பங்களுக்கு தலைமுறை தலைமுறையாக சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி சேர்க்கை, உயர்கல்வி, கல்வி உதவித்தொகை, அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு நலன்களைப் பெற முடியாமல் பல ஆண்டுகளாக கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
481 மதிப்பெண்… பள்ளியில் முதல் இடம்… ஆனாலும் சேர்க்கை மறுப்பு
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நேத்ராவதி, இந்தாண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 481 மதிப்பெண்கள் பெற்று தனது பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது கல்வித் திறமையை பாராட்டி, கிருஷ்ணகிரி அரசு மாதிரிப் பள்ளியில் மேல்நிலைப் படிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது.
ஆனால், சேர்க்கை நடைமுறையின்போது கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டிய சாதிச் சான்றிதழ் இல்லாததால், பள்ளி நிர்வாகம் சேர்க்கையை வழங்க முடியாது எனத் தெரிவித்து மாணவியை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியின் உயர்கல்விக் கனவு ஒரே நாளில் சிதைந்த சம்பவம் பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
“என் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது” – மாணவி நேத்ராவதி
இதுகுறித்து மாணவி நேத்ராவதி கண்ணீருடன் கூறுகையில்,
“நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்து 481 மதிப்பெண்கள் எடுத்தேன். நல்ல பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைத்தும் சாதிச் சான்றிதழ் இல்லாததால் என்னை சேர்க்கவில்லை. எங்கள் கிராமத்தில் பல மாணவர்கள் இதே காரணத்தால் 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நானும் மேல்படிப்பு படிக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் இருக்கிறேன்,” என்றார்.
“கூலி வேலை செய்து படிக்க வைத்தோம்… இப்போது மகள் தற்கொலை எண்ணத்தில் இருக்கிறாள்”
மாணவியின் தந்தை உருக்கமாகப் பேசுகையில்,
“நாங்கள் மூங்கில் கூடை முடைதல் மற்றும் தினக்கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு கல்வி அறிவு இல்லாததால் பழைய ஆவணங்கள் எதுவும் இல்லை. பல ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து வருகிறோம். ஆனால் பெற்றோரின் சான்றிதழ் இல்லை என்று கூறி எங்கள் விண்ணப்பங்களை நிராகரித்து வருகின்றனர்.
முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் மனு அனுப்பியுள்ளோம். இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. படிப்பைத் தொடர முடியாத விரக்தியில் என் மகள் தற்கொலை எண்ணம் வரை சென்றிருப்பது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது,” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மேல்படிப்பு கனவுடன் காத்திருக்கும் மற்றொரு மாணவி
அதே கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற மாணவி 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தும் சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் கல்லூரிகளில் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருவதாகவும், இதே நிலை கிராமத்தில் உள்ள பல மாணவர்களுக்கும் தொடர்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
‘விஜய் மாமா… எங்களுக்கு உதவி செய்யுங்கள்’
ஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வந்திருந்த பள்ளிச் சிறுமி ஜீவிதா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை நோக்கி உருக்கமான கோரிக்கை விடுத்தார்.
“விஜய் மாமா வணக்கம்… எங்களுக்கு சாதிச் சான்றிதழ் இல்லாததால் பள்ளியில் சேர்க்க மாட்டேங்குறாங்க. எங்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்க நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்,” என்று மழலைக் குரலில் பேசிய அவரது வேண்டுகோள் அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒரு சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் திறமையான மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்படக் கூடாது என்றும், மலைக்குறவர் சமூக மக்களுக்காக சிறப்பு முகாம் நடத்தி உடனடியாக சாதிச் சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், மாணவர்களின் கல்வி இடையூறு இன்றி தொடரும் வகையில் அரசு மனிதாபிமான அடிப்படையில் விரைந்து தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்