July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி நிர்வாகம் முடக்கம்: முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக ‘பத்து ரூபாய் சட்ட இயக்கம்’ கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி, ஜூலை 9, 2026:

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு பதவியேற்று 57 நாட்கள் ஆகியும் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படாதது மற்றும் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படாததைக் கண்டித்து, ‘பத்து ரூபாய் சட்ட இயக்கம்’ இன்று புதுச்சேரி அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

காலை 10:00 மணிக்கு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இயக்கத்தின் தலைவர் ரகு (எ) ரகுநாதன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசின் நிர்வாகச் சீர்குலைவை வெளிப்படுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பினர்.

புதிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் இலாகா ஒதுக்கீடு இல்லாததால் எவ்வித முடிவுகளையும் எடுக்க முடியாமல் தவிப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். சட்டமன்றம் மக்கள் சேவைக்கான இடமாக இல்லாமல், சுற்றுலா தளம் போல மாறியுள்ளதாக அவர்கள் விமர்சித்தனர்.

“என்னாச்சு என்னாச்சு… அமைச்சரின் இலாகா என்னாச்சு?”, “57 நாள் வீணா போச்சு”, “சபாநாயகர் தேர்தலை உடனே நடத்திடு” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கண்டனங்களை பதிவு செய்தனர்.

முதலமைச்சரின் செயல்பாட்டை ‘சர்வாதிகாரப் போக்கு’ என வர்ணித்த ரகுநாதன், அமைச்சரவை இலாகா மற்றும் சபாநாயகர் தேர்தல் விவகாரத்தில் அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நீதிமன்றத்தை நாடுவதோடு, வீதியில் இறங்கித் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றிருந்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனிக்கத் தவறிய அரசு, ஆட்சி செய்ய இயலவில்லை என்றால் பதவியை விட்டு விலகுவதே சிறந்தது என்று ரகுநாதன் காட்டமாகத் தெரிவித்தார்.

ஆட்சியின் நிர்வாகத் திறன் மீது பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிருப்தி அடைந்துள்ள சூழலில், இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.