புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில், “புதுச்சேரி கல்வி உரிமைச் சட்டம்” இயற்றப்பட வேண்டும் என தேசிய மக்கள் முன்னணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் சீ.சு.சுவாமிநாதன், புதுச்சேரி முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
“அண்டை மாநிலமான தமிழகத்தில், சமூக நீதி அடிப்படையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவர்களுக்கு வெளிநாட்டு உயர்கல்வி பயில ஆண்டுக்கு ₹36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால், புதுச்சேரியில் இத்தகைய சட்டப்பூர்வமான திட்டங்கள் இல்லாததால், ஏழை மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, சமூகநீதியை நிலைநாட்ட கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்:
பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையை, சட்ட அதிகாரம் கொண்ட “புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டு வாரியமாக” மாற்ற வேண்டும். 1-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை இலவசக் கல்வியை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு Pre-Matric மற்றும் Post-Matric உதவித்தொகைகளை வழங்க வேண்டும். IIT, IIM போன்ற தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹2 லட்சம் உதவித்தொகை வழங்க வேண்டும்.
தமிழகத்தைப் போலவே, உலகின் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களில் பயிலும் தகுதியுள்ள 15 மாணவர்களுக்கு தலா ₹36 லட்சம் வரை முழு மானியத்துடன் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இதில் விமான கட்டணம், கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்டவை அடங்க வேண்டும்.
கல்வி என்பது அரசின் கருணை அல்ல; அது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. எனவே, வெறும் அரசாணைகளை மட்டும் நம்பியிருக்காமல், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டத்தை இயற்றி, புதுச்சேரி மாணவர்களின் கல்வி எதிர்காலத்திற்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க வேண்டும்,” என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை புதுச்சேரி மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்