June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி – சந்தூர் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் இன்று டாஸ்மாக் கடை முன்பு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி – சந்தூர் சாலையில் கடை எண்: 2968 கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. முற்றிலும் குடியிருப்புப் பகுதியான இங்கு, முக்கிய வியாபார ஸ்தலங்களும் அமைந்துள்ளன. மேலும், இக்கடையின் மிக அருகிலேயே பிரசித்தி பெற்ற ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவிலும், ஒரு தனியார் பல்நோக்கு மருத்துவமனையும் செயல்பட்டு வருகின்றன.

கடந்த பல ஆண்டுகளாக இந்த டாஸ்மாக் கடையை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையிலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்திருப்பதால், பகல் மற்றும் இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் அநாகரிகச் செயல்கள் எல்லை மீறிப் போயுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அநாகரிகச் செயல்கள்: மது குடிப்பவர்கள் வீடுகளின் வாசல்களிலேயே அமர்ந்து மது அருந்துவதும், அங்கேயே வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பது மற்றும் போதையில் விழுந்து கிடப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களுக்கு அச்சுறுத்தல்: இதனைத் தட்டிக்கேட்கும் பெண்களை மதுப்பிரியர்கள் அநாகரிகமான வார்த்தைகளால் திட்டுவதும், கேலி கிண்டல் செய்து அச்சுறுத்துவதும் தொடர்கதையாகி உள்ளது.

கோவில் அவமதிப்பு: புனிதமான கன்னிகா பரமேஸ்வரி கோவில் வாசலிலேயே மது அருந்துவதும், இரவு நேரங்களில் அங்கு அசுத்தம் செய்வதும் பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவிலில் நிம்மதியாகப் பூஜை செய்யக் கூட முடிவதில்லை எனப் பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

“மதுப்பிரியர்களின் இந்த அநாகரிகத் தொல்லைகளைத் தாங்க முடியாமல், கடந்த காலங்களில் இப்பகுதியில் வசித்து வந்த பல குடும்பங்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர்” என அப்பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தி, இன்று மதியம் அப்பகுதிப் பெண்கள் மற்றும் பொதுமக்கள் என 50ற்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். டாஸ்மாக் கடையை அகற்றிட கோஷங்களை எழுப்பினர்.

பொதுமக்களின் இந்தத் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பும், பரபரப்பான சூழலும் நிலவியது. மாவட்ட நிர்வாகமும், டாஸ்மாக் நிர்வாகமும் தலையிட்டு, குடியிருப்பு மற்றும் வழிபாட்டுத் தலத்திற்கு அருகே உள்ள இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடி, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.