கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த வரட்டனப்பள்ளி கிராமத்தில், இன்று அதிகாலை துணிகர நகை திருட்டுச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
வரட்டனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 45) என்பவர், அப்பகுதியில் ‘பிரகதீஸ்வரர் ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் 10 மணியளவில் சரவணன் கடையைத் திறந்தபோது, கடையின் உள்ளே இருந்த பொருட்கள் சிதறிக்கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள், நகைக்கடையின் பின்புற பக்கவாட்டுச் சுவரை அதிநவீன டிரில்லிங் இயந்திரம் (துளையிடும் கருவி) உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு துளையிட்டு உள்ளே புகுந்துள்ளனர்.
உள்ளே சென்ற கொள்ளையர்கள், கடையின் வெளிப்புறப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களைத் திருடியுள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்த இரும்பு லாக்கரை (Iron Locker) உடைத்து, அதில் இருந்த தங்க நகைகளைத் திருட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், லாக்கரை அவர்களால் திறக்க முடியவில்லை. சுவாரசியமாக, அந்த லாக்கரின் சாவி கடையின் உள்ளே இருந்த ஆணியில் தான் மாட்டப்பட்டிருந்தது. அதை கொள்ளையர்கள் கவனிக்கத் தவறியதால், லாக்கரில் இருந்த சுமார் 2 கிலோ அளவிலான தங்க நகைகள் அதிர்ஷ்டவசமாக தப்பின. லாக்கரை திறக்க முடியாத விரக்தியில், வெள்ளிப் பொருட்களை மட்டும் மூட்டை கட்டிக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் சரவணன் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பர்கூர் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) தங்கதுரை சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து, துணிகர திருட்டு நடந்த பகுதியை ஆய்வு செய்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடனும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு நடை ரோந்து – குற்ற தடுப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபாடு
நகைக்கடை சுவரைத் துளையிட்டு திருட்டு: சாவியை கவனிக்காததால் 2 கிலோ தங்கம் தப்பியது! பர்கூர் அருகே பரபரப்பு
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!