அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா- “இது நம்ம ஆட்டம் 2026” ஊராட்சி ஒன்றிய அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, இன்று (25.01.2026) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம். உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல் மன ஆரோக்கியத்தினை வலுப்படுத்தும் நோக்கில் 22.1.2026 முதல் 8.2.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகள் நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில் 16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞர்களும் பங்கேற்கும் வகையில் ஒன்றிய அளவிலான போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி திருமழப்பாடியிலும், செந்துரை ஊராட்சி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி பொன்பரப்பி விளையாட்டு மைதானத்திலும், தாபழூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு அரசு மேல்நிலைப்பள்ளி காரைக்குறிச்சி விளையாட்டு மைதானத்திலும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டிமடம் விளையாட்டு மைதானத்திலும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஜெயங்கொண்டம் விளையாட்டு மைதானத்திலும் 25.1.2026 மற்றும் 27.1.2026 ஆகிய நாட்கள் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. ஊராட்சி ஒன்றிய அளவில் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் மட்டும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
மாவட்ட அளவில் 31.1.2026 அன்று தடகளம்-100மீ மற்றும் குண்டு எறிதல், ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்) வாலிபால், கேரம், ஓவியம் கோலப்போட்டிகள் ஆகிய விளையாட்டுகளிலும் 1.2.2026 அன்று கயிறு இழுத்தல் போட்டி, கபாடி, எறிபந்து (பெண்களுக்கு மட்டும்) மற்றும் உடல்சார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும், பார்வைசார் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும், அறிவு சார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும் என மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரிவுகளாகவும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன
ஊராட்சி ஒன்றிய அளவில் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.3000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.1000/-பரிசுத்தொகையும், வழங்கப்பட உள்ளது.
மாவட்ட அளவில் தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.6,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.4,000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000/-பரிசுத்தொகையும், மாநில அளவில் அணிப்பிரிவில் முதல் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.75,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.50,000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.25,000/-பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் முதலிடத்தை பெறும் பெண்களுக்கான கபாடி அணி மற்றும் ஆண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட் அணியினர்களுக்கு மட்டும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளன
எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் திறனை வெளி கொண்டுவரும் வகையில் இத்தகைய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறையானது மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது. விளையாட்டு துறையின் சிறப்பான முன்னெடுப்புகளால் நமது விளையாட்டு வீரர்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கி வருகிறார்கள். விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்துவதால் வருங்கால இளம் தலைமுறையினரின் மன திறனும், உடல் திறனும் வலிமையும் பெறும். கிராமப்பகுதிகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் உள்ள விளையாட்டு வீரர்களின் திறனை வெளிப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு இத்தகைய வாய்ப்பினை ஏற்படுத்துகிறது. விளையாட்டு வீரர்களின் திறமையை வளர்த்து சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைகள் நிகழ்த்திட உயர் தரத்திலான விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக்கொண்டு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிப்பெறுவதுடன் வாழ்விலும் வெற்றிப்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் லெனின், இதர அரசு அலுலவர்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

More Stories
பாஜக சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு
இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று, விளையாட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.