June 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை அருகே டிஎன்பிஎல் ஒப்பந்த ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டம்:

சுமார் 5 மணி நேரம் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய எம்.எல்.ஏ. ரா. கதிரவன் –

வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்ட தொழிலாளர்கள்

மணப்பாறை, ஜூன் 29:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் செயல்பட்டு வரும் டிஎன்பிஎல் காகித தொழிற்சாலையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 6 மணி முதலே தொழிற்சாலை நுழைவாயில் முன்பு நூற்றுக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் திரண்டனர். பின்னர் ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் அந்தப் பகுதியில் திரண்டு நீண்ட காலமாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்றும், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மற்றும் பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், பணிப் பாதுகாப்பு, தொழிலாளர் நலத் திட்டங்கள், பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல மறுத்ததால் தொழிற்சாலையின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன், உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை விரிவாகக் கேட்டறிந்தார்.

பின்னர் தொழிற்சாலை நிர்வாகத்தினருடனும், தொழிலாளர் பிரதிநிதிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையின் போது, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து மாநில தொழில்துறை அமைச்சர் மற்றும் தொடர்புடைய அமைச்சர்களிடம் தொலைபேசி வாயிலாக விளக்கி பேசியதுடன், விரைவில் சுமுகமான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. ரா. கதிரவன் உறுதியளித்தார்.

மேலும், தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தொழிற்சாலை நிர்வாகத்துடன் தொடர்ந்து பேசி நல்ல முடிவை எட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. அளித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்து அமைதியாக கலைந்து சென்றனர்.

இதன் மூலம் காலை முதல் நீடித்த பதற்றம் மற்றும் பரபரப்பான சூழல் மாலையில் முடிவுக்கு வந்தது.
இருப்பினும், தங்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து தொழிலாளர்கள் முடிவு எடுக்க உள்ளதாக தொழிலாளர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் காரணமாக மொண்டிப்பட்டி மற்றும் டிஎன்பிஎல் தொழிற்சாலை சுற்றுவட்டாரப் பகுதியில் நாள் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகம் இடையே சுமுகமான தீர்வு எட்டப்பட்டதன் மூலம் பதற்றமான நிலைமை முடிவுக்கு வந்தது.