July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் 27-வது கார்கில் வெற்றி தினம் அனுசரிப்பு: கடற்கரை சாலையில் உள்ள நினைவுச் சின்னத்தில் தலைவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை

புதுச்சேரி, ஜூலை 26:

நாட்டின் எல்லைகளைக் காத்து இன்னுயிர் நீத்த ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், 27-வது கார்கில் வெற்றி தினம் புதுச்சேரியில் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் அரசு சார்பில் சிறப்பு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதர் மற்றும் முதலமைச்சர் என். ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு, நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் ராஜவேலு, சிவகொழுந்து மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அழகு, ஏ.கே.டி. ஆறுமுகம், செந்தில் (எ) ரமேஷ் ஆகியோர் மலர்களைத் தூவி தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு காஷ்மீரின் கார்கில் பகுதியில் ஊடுருவிய எதிரிகளை விரட்ட இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் போரில் ஈடுபட்டது. கடுமையான சூழல்களை எதிர்கொண்டு இந்திய ராணுவம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியின் 27-வது ஆண்டு நிறைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தப் போரில் நாட்டின் இறையாண்மையைக் காக்கத் தங்களது உயிரைத் தியாகம் செய்த 527 வீரர்களின் நினைவுகள் இந்நாளில் போற்றப்படுகின்றன.