ஈரோட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக மாநில மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார் தகவல்..
ஈரோடு. ஜூன். 28
பாலியல் வன்கொடுமை சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஆகியவற்றை முன்வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வீட்டை முற்றுகையிட திமுக மாணவர் அணி முடிவு செய்துள்ளதாக, ஈரோட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில செயலாளர் வீரமணி ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஈரோடு மணல்மேடு அருகே உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று காலை திமுக மாநில மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்போது அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது, குழந்தைகளை வைத்து பிளாக்மெயில் செய்து பெரியவர்களை வாக்களிக்க வைத்து ஒரு மோசடி தனமான ஆட்சியை விஜய் தமிழ்நாட்டில் கொண்டு வந்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் சோபா மாடல் ஆட்சியில், நாள்தோறும் பெண்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகிறது. போதை கலாச்சாரம் பெருகிவிட்டது.
இந்த போதை பொருள் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் இன்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போலீஸ் துறையை தன் கையில் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் இதனை எல்லாம் கண்டு கொள்ளாமல், மௌனம் காத்து வருகிறார். இதுதான் பெண்களுக்கான மாற்றத்திற்கான ஆட்சியா..?. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து விட்டது.
மேலும் இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், அந்த அடையாள அட்டையில் முகவரி, செல்போன் எண், ரத்த வகை உள்ளிட்ட விவரங்களும், மேலும் எந்த ஜாதி, எந்த மதம் என்ற குறியீடுகளும் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பள்ளி செல்லும் பிஞ்சு குழந்தைகளின் மனதில் ஜாதி, மதம் என்னும் நஞ்சை விதைக்க இந்த அரசு முயற்சி செய்கிறது. அதற்கு ஆதாரம் தான் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசி உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உங்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, அமைச்சர்களின் ஒரு புரிதல் இல்லாத செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு ஈரோட்டில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், திமுக மாநில மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மாநிலத் துணைச் செயலாளர் கோகுல், சுரேஷ்குமார், தனசேகரன், ஈரோடு தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜயகுமார், உள்ளிட்ட மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது