சேலம், ஜூன் 23:
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி 58-ஆவது வார்டில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், தங்களை மேற்பார்வையிடும் தனியார் சூப்பர்வைசர் ஒருவர் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டி, ஜாதி ரீதியான அவமதிப்புகளை செய்து வருவதாக குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த பல மாதங்களாக பணியின்போது அவமரியாதையான பேச்சு, மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதன் காரணமாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரின் செயல்பாடுகள் தொடர்ந்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உண்மை நிலையை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அச்சமின்றி பணியாற்றும் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் வலுத்து வருகிறது.

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது