February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,02/02/2026.

சேலத்தில் நகைக்கடையில் நகை சீட்டு போட்டவர்களுக்கு நடந்த பெரிய ட்விஸ்ட்.

சேலம் கடைவீதியில் ஓவியா ஸ்வர்ணமஹால் என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வந்தது. இங்கு சேலம் டவுன், குகை, கருங்கல்பட்டி, களரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் நகை சீட்டு போட்டிருந்தனர்.

ஆனால் கடை திடீரென மூடப்பட்டது, இதையடுத்து நகை சீட்டு நடத்தி மோசடி செய்த கடை முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்க நகை இன்று ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. நினைத்தே பார்க்க முடியாத வேகத்தில் நகையின் விலை உயர்ந்து வருகிறது. நகை சீட்டு போட்ட முதிர்வு நிலையில்உள்ள பலர் நகையை எடுக்க ஆர்வம்காட்டி வருகிறார்கள். ஆனால் சில இடங்களில் நகை சீட்டு போட்டவர்களுக்கு நகை அல்லது பணம் கிடைக்காமல் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் நடக்கிறது.

சேலம் கடைவீதியில் ஓவியா ஸ்வர்ணமஹால் என்ற பெயரில் சண்முகம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் நகைச்சீட்டு நடத்தப்பட்டு வந்தது. இதில் சேலம் டவுன், குகை, கருங்கல்பட்டி, களரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சீட்டில் சேர்ந்து ரூ.ஆயிரம் முதல் பல ஆயிரம் ரூபாய் வரை மாதம்தோறும் செலுத்தி வந்துள்ளார்கள். இந்த நிலையில் சீட்டு முடிந்த பலருக்கு செலுத்திய பணத்திற்கான நகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே அந்த நகைக்கடை திடீரென மூடப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நகை சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று அந்த நகைக்கடைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் நகை சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு கூறி கடை முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் நகை சீட்டு மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தார்கள். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், நகை சீட்டு தொடர்பாக இதுவரை 40 பேர் புகார் கொடுத்துள்ளனர். அவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுதொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம் என்றார்கள்.

நகை சீட்டு போட்டு ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் கூறுகையில், தங்க நகை சீட்டுக்கு மாதந்தோறும் பணம் கட்டி வந்தோம். ஆனால் நகை சீட்டு முடிந்த பிறகும் அதற்குரிய நகையோ, பணமோ தராமல் காலம் தாழ்த்தி வந்தார்கள். இன்று பணம் திருப்பி தருவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் வந்து பார்த்த போது நகைக்கடை மூடப்பட்டிருக்கிறது. நகைக்கடை உரிமையாளருக்கு போன் செய்தால் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு உள்ளது. எங்களது பணத்தை திருப்பி வாங்கி கொடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவலையுடன் கூறினார்கள்.

Facebook
YouTube
Instagram
WhatsApp