June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலத்தில் திமுக”வை விளாசிய இபிஎஸ்-சம்பளம் கூட தர முடியாத அரசு.

துரைமுருகனுக்கே பதவியில்ல காரணம் அவர் கருணாநிதி குடும்பத்தில் பிறக்கல இபிஎஸ் விளாசல்.

திமுக என்பது ஒரு அரசியல் கட்சியே அல்ல,அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. தமிழகத்தில் நடைபெற்று வரும் வாரிசு அரசியலுக்கும்,குடும்ப ஆட்சிக்கும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்,”என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:

திமுகவில் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் உயர் பதவிகள் கிடைக்கும். அக்கட்சியில் நீண்ட காலம் சட்டமன்ற உறுப்பினராகவும், அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்கும் துரைமுருகனுக்குக் கூட துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. அவர் கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்பதுதான் அதற்கு ஒரே காரணம். மூத்த தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு, வாரிசுகளுக்கு மகுடம் சூட்டுவதே திமுகவின் வாடிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மாநிலத்தைப் பாதுகாக்க வேண்டிய டிஜிபி பதவிக்கே இன்னும் ஒரு நிரந்தர அதிகாரியை நியமிக்க முடியாத நிலையில் இந்த அரசு உள்ளது. மக்களைப் பாதுகாக்கும் எண்ணம் முதல்வருக்கு இருந்தால், உடனடியாக டிஜிபி-யைப் பணியமர்த்த வேண்டும். இன்று தமிழக இளைஞர்கள் போதைப்பொருட்களால் சீரழிந்து வருகின்றனர். சிறுவர்கள் கூட வன்முறையில் ஈடுபடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது. இதைப் பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு எந்தக் கவலையும் இல்லை.

திமுக அரசு நிதி மேலாண்மையில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் ஏழை மக்களுக்கு முறையாகச் சம்பளம் கூட வழங்க முடியாத கையாலாகாத அரசாக இது உள்ளது. அரசு கஜானாவில் நிதி இல்லை என்று கூறிக்கொண்டு, துணை முதல்வர் உதயநிதி கார் பந்தயம் நடத்துகிறார். இது எத்தகைய மக்கள் நலன் என்று புரியவில்லை.

சேலம் மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் இங்கு அவர்களால் எந்தப் புதிய திட்டத்தையும் கொண்டுவர முடியவில்லை. மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற திமுகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும். தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.