June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சிபிஐ(எம்.எல்) கோரிக்கைமணப்பாறை பேருந்து நிலையம் எதிரே அரசு நிலம் பாழடைப்பு

வருவாய்த் துறையா? நகராட்சியா? – அதிகாரிகளின் குழப்பத்தால் பயன்பாடின்றி கிடக்கும் ஒரு ஏக்கர் நிலம்;

வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மணப்பாறை, ஜூன் 26:
திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம், வருவாய்த் துறைக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் இடையிலான நிர்வாக குழப்பத்தால் நீண்டகாலமாக பயன்பாடின்றி கிடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த அரசு நிலத்தில் கடந்த காலங்களில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வந்தது. பின்னர் அந்த இடத்தின் உரிமை மற்றும் பராமரிப்பு தொடர்பாக மணப்பாறை நகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், யாருடைய முழு கட்டுப்பாட்டிலும் இல்லாத நிலையில் இந்த அரசு நிலம் தற்போது குப்பைகள் கொட்டப்படும் இடமாக மாறியுள்ளது. புதர்கள் மண்டி, சுகாதாரமற்ற சூழல் நிலவுவதால் அப்பகுதி மக்களும், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் கூடும் இடமாக இந்த பகுதி மாறும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பேருந்து நிலையத்திற்கு நேரெதிரே அமைந்துள்ள இந்த இடம் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய மையப்பகுதியாக இருப்பதால், இங்கு வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது அந்த இடத்தில் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பதாகை வைக்கப்பட்டுள்ள நிலையில், எந்தவித மேம்பாட்டு பணிகளும் நடைபெறாததால் அரசு நிலம் வீணாகிக் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (சி.பி.ஐ.எம்.எல்.) மணப்பாறை
நகரச் செயலாளர் பி. பாலு கூறுகையில், “முக்கியமான இந்த அரசு நிலத்தை வருவாய்த் துறையோ அல்லது நகராட்சி நிர்வாகமோ உடனடியாக முழுமையாக கையகப்படுத்தி, சுற்றுப்புறத்தில் வணிக வளாகங்கள் அமைத்து, அதன் நடுப்பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்களுக்கு வசதி ஏற்படுவதோடு, அரசுக்கும் வருவாய் கிடைக்கும்,” என்றார்.
நகரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ள இந்த அரசு நிலத்தை விரைந்து பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மணப்பாறை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.