கோவை மாநகராட்சி ஆணையர் திரு. கட்டா ரவி தேஜா திறந்துவைத்தார்
நகர்ப்புற நீர் மற்றும் கழிவு மேலாண்மைக்கு நிலையான தீர்வுகளை உருவாக்கும் நோக்கில், பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் முழுமையான நிதியுதவியுடன் “நிலையான நீர் மற்றும் கழிவு மேலாண்மைக்கான சிறப்பு மையம்” (Centre of Excellence – CoE) அமைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி இன்று தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டில் பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முயற்சி வெளிப்படுத்துகிறது.
இந்த சிறப்பு மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் , கோயம்புத்தூர் மாநகராட்சி , பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை மற்றும் சிறுதுளி ஆகியவற்றுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு, பிஎஸ்ஜி தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் , சிவில் பொறியியல் துறை, கோயம்புத்தூர் மாநகராட்சி, சிறுதுளி மற்றும் பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை இணைந்து 31 ஜூலை 2026 அன்று, நீலாம்பூரில் உள்ள பிஎஸ்ஜி ஐ டெக் வளாகத்தில் நடத்திய “நிலையான நீர் மற்றும் கழிவு மேலாண்மை” கருத்தரங்கின் போது நடைபெற்றது.
பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் முழு நிதியுதவியுடன் செயல்படவுள்ள இந்த சிறப்பு மையம், கோயம்புத்தூர் மாநகராட்சியின் செயல்பாட்டு அனுபவம், பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி திறன் மற்றும் சிறுதுளியின் சுற்றுச்சூழல் புனரமைப்பு மற்றும் சமூக பங்களிப்பு அனுபவம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு, நீர் மறுபயன்பாடு, திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் புனரமைப்பிற்கான நிலையான தொழில்நுட்பங்களை உருவாக்குதல், களத்தில் செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் பரவலாகப் பயன்படுத்த வழிவகை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், ஆராய்ச்சி, முன்னோடி திட்டங்கள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, திறன் மேம்பாடு, மாணவர் பயிற்சிகள், தொழில்நுட்ப வெளியீடுகள் மற்றும் அறிவுப் பரிமாற்ற நடவடிக்கைகளும் இந்த மையத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசு அதிகாரிகள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு, நீர் வள மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு, சுற்றுச்சூழல் புனரமைப்பு மற்றும் சுற்றுச்சுழற்சி பொருளாதாரம் தொடர்பான புதுமையான மற்றும் நிலையான தீர்வுகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இயற்கை சார்ந்த சுத்திகரிப்பு முறைகள், மையமற்ற கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள், நீர்தரக் கண்காணிப்பு, திடக்கழிவு மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நகர்ப்புற உள்கட்டமைப்புகள் குறித்த தொழில்நுட்ப உரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., அவர்கள், பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபாலகிருஷ்ணன் அவர்கள், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் திருமதி. வனிதா மோகன் அவர்கள், இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), கான்பூர் முன்னாள் பேராசிரியர் டாக்டர் வினோத் தாரே அவர்கள், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கிடையேயான இந்த கூட்டு முயற்சியாக உருவாகியுள்ள சிறப்பு மையம், அறிவியல் அடிப்படையிலான ஆராய்ச்சி, களச் சோதனை, தொழில்நுட்ப விளக்கக் காட்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான நிரந்தர தளமாக விளங்கும். பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளைநிறுவனத்தின் நிதியுதவியுடன் உருவாகும் இந்த மையம், நீர் பாதுகாப்பு, திறன்மிக்க கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் புனரமைப்பிற்கான நிலையான தொழில்நுட்பங்களை விரைவாக நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது

More Stories
செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
விழுப்புரத்தில் அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்
பள்ளிபாளையம் பகுதிகளில் தொடரும் சாயப்பட்டறைகளின் அத்து மீறல்கள்..