August 1, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திமுகவினரே எதிராக செயல்பட்டனர்: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பரபரப்பு பேட்டி

ஈரோடு ஆகஸ்ட் – 02

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டவருமான தோப்பு வெங்கடாசலம், நடந்து முடிந்த தேர்தலில் திமுகவினரே எனக்கு எதிராக வேலை செய்தனர் எனத் குற்றம்சாட்டினார்.

சுழற்சி முறையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடித்தளமிட்டதை சுட்டிக்காட்டிய அவர், அதிமுகவில் இருந்தபோதும், பின்னர் திமுகவில் இணைந்தபோதும் கட்சியின் வளர்ச்சிக்கும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கும் அரும்பாடுபட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், அத்திக்கடவு – அவினாசி திட்டத்தில் நீர் தராதது மற்றும் சிப்காட் போராட்ட வழக்குகள் போன்ற காரணங்களால் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியினாலும், கட்சிக்குள்ளேயே சிலர் தனக்கு எதிராகச் செயல்பட்டதாலும் பெருந்துறை தொகுதியில் தோல்வி ஏற்பட்டதாகக் கூறினார்.

உள்கட்சியினரின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து தலைமைக்குக் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், பொறுப்பில் இருந்தும் பியூன் கூட தன் பேச்சைக் கேட்காத நிலையே இருந்ததாகவும் ஆதங்கப்பட்டார்.

மாற்றுக்கட்சிக்குச் செல்லும் எண்ணம் தற்போது இல்லை எனத் தெளிவுபடுத்திய அவர், திமுகவில் தொடர்ந்து நீடிப்பது குறித்து தொண்டர்களுடன் கலந்துபேசி இன்னும் ஒரு வாரத்தில் தனது முடிவை அறிவிக்கப்போவதாகத் தெரிவித்தார்.