February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விஜய் முன்னிலையில் நவ.27-ல் தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் வரும் 27-ந் தேதி, நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் எம்.எல்.ஏ., அமைச்சராக இருந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுக ஆட்சியில் முக்கிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் தர்ம யுத்தத்தின் போது, அடுத்த முதல்வர் யார் என்கிற ரேஸில் கே.ஏ.செங்கோட்டையன் பெயரே முதலில் அடிபட்டது. அதன் பின்னர்தான் அதிமுக எம்.எல்.ஏக்களால் எடப்பாடி பழனிசாமி , முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக திடீரென சில மாதங்களுக்கு முன்னர் போர்க்கொடி தூக்கினார் கே.ஏ.செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார் செங்கோட்டையன். இதனால் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை முதலில் பறித்தார்.

இதன் பின்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இதனால் அதிமுகவில் இருந்தே செங்கோட்டையனை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர்களையும் கூண்டோடு அதிமுகவில் இருந்து நீக்கினார் இபிஎஸ்.

இந்த நிலையில்தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கே.ஏ.செங்கோட்டையனின் சகோதரி மகனான முன்னாள் டிஜிபி எம்.ரவி, கடந்த வாரம் நடிகர் விஜய்யை இது தொடர்பாக சந்தித்து பேசியிருந்தார்.

இதனையடுத்து தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் செங்கோட்டை யன், விஜய் முன்னிலையில் நவம்பர் 27-ந் தேதி தவெகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Facebook
YouTube
Instagram
WhatsApp