தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டை உடையார் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகன் ஷாருகேஸ் (20). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையில் உள்ள கமலபுரம் என்ற இடத்தில் தாமரைச்செல்வன் என்பவர் நடத்தி வரும் ராணுவம் மற்றும் காவல்துறை தேர்வுக்கான உடற்தகுதிப் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். மேலும், திறமையாக செயல்பட்டதால் அதே மையத்தில் பயிற்சி உதவியாளராகவும் (Team Leader) செயல்பட்டு வந்துள்ளார்.
வழக்கம்போல் இன்று காலையும் பயிற்சி மையத்தில் மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் காலைப் பயிற்சி முடிந்தவுடன், குளிப்பதற்காக அங்குள்ள தென்னந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள குளிக்கும் இடத்திற்கு ஷாருகேஸ் சென்றுள்ளார்.
அப்போது, குளிக்கும் இடத்திற்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காக அங்குள்ள மின்சாரப் பெட்டியை (Electricity Box) ஷாருகேஸ் திறந்துள்ளார். எதிர்பாராதவிதமாக அந்த மின் பாக்ஸில் இருந்து மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்தார் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக பயிற்சி மாணவர்கள், உடனடியாக அவரை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஷாருகேஸை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்தூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷாருகேஸின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தூர் அருகே உள்ள தனியார் காவலர் பயிற்சி மையத்தில் மின்சாரம் தாக்கியதில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாருகேஷ் 20 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!