June 19, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

09.06.2026

காங்கிரசை முழுமையாக துடைத்தெறிய
மக்கள் தயாராகிவிட்டதை அறியாத பாலனுக்கு
திமுக கடும் கண்டனம் !

செய்தி அறிக்கை

திராவிட முன்னேற்றக் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பூ. மூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: –
கடந்த இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட வற்புறுத்தியும் வேண்டாம் என்று ஓடிப்போய் அரசியல் துறவரம் பூண்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாலன், தானும் அரசியலில் உள்ளதுபோல் காட்டிக்கொள்ள திடிரென மீடியா முன்பு தோன்றி தேர்தல் தோல்விக்கு திமுகவும், அதன் அமைப்பாளர் சிவா அவர்களும் தான் காரணம் என்றும் ரங்கசாமியின் பிடீம் என்றும் வசைமாறி பொழிந்திருக்கிறார். இது யாரையோ திருப்திப்படுத்த வேண்டுமென்றோ, காலியாகும் காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க வேண்டுமென்றோ நடத்தப்படும் அவதூறு பரப்புரை என்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தேர்தல் பற்றி பேசுவதற்கு பாலனுக்கு எவ்வித தார்மீக பொறுப்பும் இல்லை. தனக்கு துணை சபாநாயகர் பதவி அளித்த உழவர்கரை மக்களை தவிக்கவிட்டு ஓடி மறைந்தவர்தான் இவர். அந்த தொகுதி பாஜக ஆதரவாக மாறியதற்கு அவரது மறைமுக ஆதரவே காரணம்.
கடந்த தேர்தலில்கூட உழவர்கரையில் போட்டியிட்ட விசிகவுக்கு ஒரு சதவீதம் கூட தேர்தல் பணி செய்யாமல் என்.ஆருக்கு சாதகமாக இந்த கூட்டணியை காட்டிக்கொடுத்தவர் இவர். கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியே அவரை ஒதுக்கி வைத்திருந்தது அனைவரும் அறிந்தது.
திமுகவோ, அதன் அமைப்பாளராகிய சிவா அவர்களோ அல்லது தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் அவர்களோ தேர்தலுக்கு முன் வைத்த கருத்து, காங்கிரஸ் 2 உறுப்பினர்களை கொண்ட நிலையில் திமுக 6 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு பெரும்பான்மை பலத்துடன் உள்ள காரணத்தால் திமுக தலைமையில் தான் ஆட்சி அமைய வேண்டும் என்பதே ஆகும். ஆனால் அதற்கு முன்பாகவே காங்கிரஸ் செய்த சித்து வேலை என்னவென்றால் இரண்டாம் கட்ட தலைவர்கள் என்ற போர்வையில் டெல்லிக்கு ஒரு குழுவை அனுப்பி 21 தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என்றும் மீதி 9 தொகுதிகளை திமுக உள்ளிட்ட கட்சிகள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்றும் மனு கொடுத்தும், அதனை புதுச்சேரியில் பல கூட்டங்களில் பொதுவெளியில் பேசியும் பிரச்சனையை வளர்த்தனர். அதுமட்டுமின்றி தேர்தல் பேச்சுவார்த்தையிலும் அதனையே வலியுறுத்தினர்.
உடன்பாட்டிற்கு காங்கிரஸ் நின்ற 16 இடங்கள் தவிர்த்து திமுக நின்ற 5 இடங்களிலும் நட்பு போட்டி (FRINDLY CONTEST) என்ற அக்கப்போர் திட்டத்தை வைத்து உடன்பாட்டிற்கு வேட்டு வைத்தனர். பாலன் அடங்கியுள்ள உழவர்கரை தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் விசிகவுக்கு எதிராக சிவசங்கரை நிறுத்தி விசிகவுக்கு குழிபறித்தனர்.
இவர்களின் இந்த இரட்டைவேட அரசியல் இங்குமட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டு கூட்டணிக் கட்சிகளை பலவீனப்படுத்தியதை சமீபத்தில் டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் அகிலேஷ்யாதவ், மம்தாபேனர்ஜி, தேஜஸ்வியாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் முன்வைத்து காங்கிரசை தோலுரித்து உள்ளனர். புதுச்சேரியில் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த தேர்தல் தோல்விக்கும் குழப்பத்திற்கும் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்திற்கு எதிராக மறியல் நடத்தி அவரும் தனது ராஜினாமாவை கொடுத்திருந்த கதையெல்லாம் பாவம் பாலனுக்கு தெரியவில்லை. இப்பொழுதுதான் தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறார் போலும்.
திமுகவை பொறுத்தவரை தோழமை என்றால் உணர்வுப் பூர்வமாக ஆதரிப்பதும், எதிர்ப்பு என்றால் சமரசம் இன்றி தீரமுடன் எதிர்ப்பு நிற்பதுமான கொள்கையை கொண்டது. கடந்த ஆட்சியில் திமுக மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டுள்ளது. என்.ஆர். அரசின் மக்கள் விரோத திட்டங்களையும், ஒன்றிய அரசுக்கு எடுபிடி செயல்பாடுகளையும் வன்மையாக கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் சமையில் எரிவாயு தட்டுப்பாடு, 100 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி, போலி மருந்து விவகாரம், மண்ணன் மைந்தர்களுக்கு படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்காத ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து, குடிநீரில் கழிவுநீர் கலந்து உயிரிழந்த விவகாரம், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் லஞ்ச வழக்கில் கைதான சம்பவம், மின்கட்டண உயர்வு, மின்துறையை தனியார் மயம், துறைமுகம் தனியார் மயம் கண்டித்து, சிறப்பு திருத்த வாக்காளர் எஸ்ஐஆர் பணியை கைவிட வலியுறுத்தல், புதிய கல்விக் கொள்கையை கைவிட வலியுறுத்தில், மத்திய பல்கலைக் கழக நிர்வாக சீர்கேடு உள்ளிட்ட மக்கள்திரள் போராட்டங்களை முன்னெடுத்ததைபாவம் பாலன் அறிந்திருக்க மாட்டார்.
அதுமட்டுமின்றி சட்டமன்றத்தில் என்.ஆர். அரசு கொள்கைகளுக்கும், செயல்பாட்டிற்கும் எதிராக மிக கடுமையான நடவடிக்கைகளிலும் விமர்சனங்களை முன்வைத்தும் இரா. சிவா அவர்கள் தலைமையில் சிறந்த எதிர்க்கட்சியாக நிரூபித்து இருக்கிறது. எங்களைப் பார்த்து என்.ஆரின் பிடீம் என்று சொல்வதற்கு யார் உங்களுக்கு தைரியம் கொடுத்தது.
புதுச்சேரியில் பாரதிய ஜனதா தொடர்ந்து வளர்வதற்கு காரணம் காங்கிரசிலிருந்து தலைவர்களும், தொண்டர்களும் படையெடுப்பதுதான் என்று யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதுபோல் என்.ஆர். வெற்றிக்கு புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் உழைத்தார்கள் என்பது ஊர் அறிந்த விஷயம். திமுகவும்–என்.ஆர் காங்கிரசும் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் என்.ஆருக்கு தான் வேலை செய்துள்ளது. என்.ஆர். காங்கிரசில் வெற்றி பெற்ற பல சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசில் இருந்து கட்சி மாறியவர்கள் தான். ஆகவே, காங்கிரசையும், என்.ஆர். காங்கிரசையும் பிரித்து பார்க்க முடியாது. இதை உணர்ந்த மக்கள் கடந்த தேர்தலில் காங்கிரசை ஒற்றை இலக்கம் கொடுத்து பாடம் கற்பித்துள்ளனர். வரும் காலத்தில் புதுச்சேரி மக்கள், காங்கிரசை முழுவதும் துடைத்தெறிய தயாராகிவிட்டனர் என்பதை பாலன் புரிந்துகொள்ள வேண்டும்.
சென்ற தேர்தலில் நாராயணசாமிக்கு சீட்டு கொடுத்தால் நான் காங்கிரசை விட்டு விலகுவேன் என்று கூறி 30 ஆண்டுகாலம் காங்கிரசின் தூணாக இருந்த நாராயணசாமிக்கு உலைவைத்தவர்கள் பாலன் கூட்டத்தினர். அதுமட்டுமல்ல புதுச்சேரியில் முதல்வராக இருந்த ஆர்.வீ. ஜானகிராமன் அவர்களால் அரசியல் முகவரி பெற்று இறுதிகாலத்தில் அவருக்கே இடைஞ்சலாக பல்வேறு சித்து விளையாட்டுக்களை காட்டி திமுகவில் ஜானகிராமனுக்கு களங்கத்தை கற்பித்தவர் பாலன் என்பதை புதுச்சேரி மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆகவே, கடந்த 10 ஆண்டுகாலமாக காணாமல் போன பாலன் தன் வரவைக் காட்டிக்கொள்ள திமுகவை பொதுமேடையில் விவாதிக்க அழைப்பது வேடிக்கையாக உள்ளது. அந்த அளவிற்கு முதுகில் குத்தும் துரோகிகளோடு விவாதித்து தரம்தாழ்த்திக்கொள்ள திமுக தயாராக இல்லை. தனக்கு ஆரம்ப அரசியல் அடிச்சுவடியைக் கொடுத்து தன்னை வளர்த்தெடுத்த திமுக மீது திடீர் பாய்ச்சல் வேண்டாம் என்று திமுக சார்பில் எச்சரிக்கிறேன்.