சேலத்தில் த.வெ.க அலுவலக திறப்பு விழாவில் அரசுப்பள்ளி மாணவர்கள் – சர்ச்சையில் தலைமையாசிரியர்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திம்மம்பட்டியில் த.வெ.க அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்திருக்கிறது.
சிறப்பு விருந்தினராக வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ( த.வெ.க) பழனிவேல் பங்கேற்றிருக்கிறார். கட்சி அலுவலக திறப்பு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம் என்கிற பெயரில் குரால் நத்தம் அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து 50 மாணவர்களை விடுமுறை நாளில் சீருடையில் வரவழைத்ததுடன் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கச் செய்திருக்கிறார்கள்.
அரசுப்பள்ளி மாணவர்கள்
இந்த அத்துமீறல் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க- வைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழரன், “அரசு நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வதற்கே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வருகிறார் என்கிற ஒரே காரணத்திற்காக அரசுப்பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
விடுமுறை நாளில் சீருடையில் அழைத்துச் சென்று சுமார் 2 மணி நேரம் வரை குழந்தைகளை காத்திருக்க வைத்திருக்கிறார்கள். விதிமீறலில் ஈடுபட்ட குரால் நத்தம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வநாயகம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தலைமையாசிரியர் தெய்வநாயகத்திடம் பேசினோம், ” இந்த பள்ளியை முன்மாதிரி அரசு பள்ளிகளில் ஒன்றாக முன்னேற்ற பாடுபட்டவன் நான். சம்மள பணம் 10 ஆயிரம் ரூபாயில் 100 குழைந்தைகளுக்கு போன வாரம் தான் வெயிலுக்கு குடை வாங்கிக் கொடுத்தேன். பள்ளியில் தண்ணீர் பற்றாக்குறை பெரிய பிரச்னையாக இருக்கிறது. எம்.எல்.ஏ வருகிறார் என்றார்கள். அவரைச் சந்தித்து மனு கொடுக்க சென்றோம். கடைசியில் இந்தமாதிரியான வில்லங்கம் வந்துவிட்டது. அரசியல் கட்சிக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை ” என்றார்.
அரசுப்பள்ளி மாணவர்கள்
இது குறித்து சேலம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி இடம் கேட்டோம், ” இது தொடர்பாக எங்களுக்கும் புகார் வந்திருக்கிறது. உண்மை தன்மையைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். உறுதி செய்யும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.