புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள PMVBRY திட்ட அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறோம்.
1. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முழுமையான துரோகம்
புதுச்சேரியில் 80%க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமானம், விவசாயம், சிறு கடைகள், காண்ட்ராக்ட் வேலைகள் போன்ற EPFO வரம்புக்கு வெளியே உள்ளனர். இவர்களுக்கு ஒரு பைசா பயனும் இல்லாத திட்டத்தை “தொழிலாளர் நலன்” என்று விளம்பரப்படுத்துவது ஏமாற்று வேலை. உண்மையான உழைக்கும் மக்களை இந்த அரசு கைவிட்டுவிட்டது.
2. முதலாளிகளுக்கு மானியம், தொழிலாளிக்கு நிபந்தனை
ஒரு தொழிலாளி ₹15,000 பெற 1 வருடம் அதே நிறுவனத்தில் அடிமை போல வேலை செய்ய வேண்டும். இடையில் வேலை போனாலோ, கொடுமை தாங்காமல் வெளியேறினாலோ பணம் கிடையாது. ஆனால் முதலாளிகளுக்கு 4 வருடம் வரை மாதம் ₹3000 அரசு பணம் நேரடியாக கொட்டுகிறது. இது தொழிலாளர் நல திட்டமா அல்லது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகை திட்டமா?
3. தற்காலிக திட்டம், நிரந்தர தீர்வு இல்லை
31.07.2027 உடன் முடியும் இந்த திட்டத்தால் வேலையில்லா திண்டாட்டம் தீரப்போவதில்லை. நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்காமல், காலி பணியிடங்களை நிரப்பாமல், அரசு துறைகளில் ஆள் எடுக்காமல், 2 வருடத்துக்கு காசு கொடுத்து கண்துடைப்பு செய்கிறது மத்திய அரசு.
4. சிறு-குறு தொழில்களை நசுக்கும் நிபந்தனை
EPFO பதிவு, மாதாந்திர ரிட்டர்ன், கணக்கு வழக்கு என சிறு கடைகள், உணவகங்கள், சிறு தொழில் செய்வோரால் சமாளிக்க முடியாத நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால் பெரிய கம்பெனிகள் மட்டுமே பயனடையும். புதுச்சேரியின் உள்ளூர் தொழில்கள் நசுக்கப்படும்.
5. Viksit Bharat 2047 என்பது வெற்று முழக்கம்
குறைந்தபட்ச கூலி சட்டத்தை அமல்படுத்தாமல், 12 மணி நேர வேலை சட்டத்தை கொண்டுவர துடிக்கும் அரசு, ₹15,000 பிச்சை காசை கொடுத்துவிட்டு “வளர்ச்சி” என்று பேசுவது வெட்கக்கேடு. தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை நிறைவேற்றிய அரசு, இப்போது ஊக்கத்தொகை நாடகம் ஆடுகிறது.
எனவே, இந்த PMVBRY திட்டம் என்பது தொழிலாளர் விரோத, முதலாளிகளுக்கு ஆதரவான, அமைப்புசாரா தொழிலாளர்களை புறக்கணிக்கும் திட்டம். இதை முழுமையாக நிராகரிக்கிறோம்.
கோரிக்கைகள்:
- அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும் வகையில் நிபந்தனையற்ற வேலைவாய்ப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
- புதுச்சேரி அரசு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- குறைந்தபட்ச மாத ஊதியம் ₹26,000 என நிர்ணயித்து சட்டமாக்க வேண்டும்.
நன்றி
இவண்
கா. சிவா
பொதுச்செயலாளர்
தேசிய மக்கள் முன்னணி
www.dmmparty.com

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்