June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பத்திரிகை செய்திஉடனடி வெளியீட்டுக்கு

புதுச்சேரி நியமன MLA பதவி: ஒரே கட்சிக்கா? வெளிப்படைத்தன்மை எங்கே? – சுவாமிநாதன் கேள்வி

புதுச்சேரி, 23 மே 2026:

புதுச்சேரி மாநிலத்தில் நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்ந்து ஒரே கட்சியைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிழக்கச் செய்கிறது என புதுச்சேரியும் என் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் முன்னணியின் நிறுவனத் தலைவர் சீ.சு.சுவாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று 23.05.2026 காலை 11 மணியளவில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் மூலம் ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுமக்களிடையே எழும் சந்தேகத்தை போக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. வேறு யாரும் கோரிக்கை வைக்கவில்லை என்ற ஒற்றை காரணத்திற்காக ஒரே கட்சிக்கு மட்டும் பதவிகள் செல்வது ஏற்புடையதா?” என கேள்வி எழுப்பினார்.

அவர் எழுப்பிய முக்கிய கேள்விகள்:

  1. தேர்வு செய்யும் முறை என்ன? நியமன MLA பதவிக்கு என்ன தகுதிகள் பார்க்கப்படுகின்றன? இதற்கான வெளிப்படையான வழிகாட்டுதல் உள்ளதா?
  2. விண்ணப்பிக்க வழி உள்ளதா? தகுதியுள்ள பொதுமக்கள், சமூக சேவகர்கள், பிற கட்சியினர் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளதா? இல்லையெனில் ஏன்?
  3. கடந்த 10 ஆண்டுகளில் நியமனம் செய்யப்பட்டவர்கள் யார்? அவர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற பட்டியலை ஒன்றிய அரசு வெளியிடுமா?
  4. ஒன்றிய அரசுக்கு வந்த கோரிக்கைகள் எத்தனை? என்னைப் போல் வேறு யாரெல்லாம் கோரிக்கை வைத்துள்ளனர்? அவை ஏன் நிராகரிக்கப்பட்டன?

“இந்த பதவியைப் பெற அனைத்து தகுதியும் எனக்கு உள்ளது என்ற அடிப்படையில் நான் கோரிக்கை வைத்துள்ளேன். இது எனக்கான கோரிக்கை மட்டுமல்ல. புதுச்சேரி மக்களின் பிரதிநிதித்துவம் அனைத்து தரப்புக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஜனநாயக கோரிக்கை” என்றார் சுவாமிநாதன்.

நியமன உறுப்பினர் பதவிகள் யூனியன் பிரதேசத்தின் கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை துறைகளில் சிறந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் நோக்கம். அதை அரசியல் நியமனமாக மாற்றுவது சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் இதற்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புக்கு:
சீ.சு.சுவாமிநாதன்
நிறுவனத் தலைவர்
புதுச்சேரியும் என் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு & தேசிய மக்கள் முன்னணி
தொடர்பு எண்: 9787721199

You may have missed

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஜூன்-07:உலக சுற்றுச்சூழல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மக்கள் ஜனாதிபதி APJ அப்துல் கலாமின் வல்லரசு இந்தியா இயக்கம் மற்றும் APJ அப்துல் கலாம் IAS அகாடமி சார்பில் செஞ்சி கோட்டை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு வருவாய் ஆய்வாளரும், சமூக சேவகருமான கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அருள்தாஸ், புகழரசன், தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் ஹரிவாசன் மற்றும் செஞ்சி APJ அப்துல் கலாம் IAS அகாடமியின் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.