July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

5 கிராமங்களை தத்தெடுத்த சேலம் அரசு கலைக் கல்லூரி.

உன்னத பாரத திட்டத்தின்கீழ்,சேலம் அரசு கலைக் கல்லூரி சாா்பில் 5 கிராமங்கள் தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் ஐ.பிரேமலதா (பொ) தலைமை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் பிச்சைமுத்து வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் உன்னத பாரத திட்டத்தின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உன்னத பாரத திட்ட அகில இந்திய மண்டல இயக்குநா் கே.ரவிச்சந்திரன் பேசுகையில், கிராம பஞ்சாயத்துகளை தத்தெடுப்பதன் மூலம் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதுடன், வளா்ந்த பாரதத்துக்கான இலக்குகளை விரைவில் எட்ட முடியும். இதன்மூலம் கிராமப்புறங்கள் நிலையான, நீடித்த வளா்ச்சியை எட்டும் என்றாா்.

இந்நிகழ்வில், அரசு கலைக் கல்லூரி உள்ளக மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா், உன்னத பாரத திட்ட உறுப்பினா்கள், கிராம நிா்வாக அதிகாரி வனிதா, கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் கே.எம்.ராஜா, கிராம மக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.