உலகெங்கும் அமைதி நிலவ வேண்டியும், சர்வதேச சட்டங்களை மீறி செயல்படும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் போக்கைக் கண்டித்தும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் புதுச்சேரி மாநிலக் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜெ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்
ஐநா சாசனத்தின் விதி 2(4)-ன்படி, ஒரு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தலைவர்களையும் பொதுமக்களையும் படுகொலை செய்வது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது. இது உலக அமைதிக்கே அச்சுறுத்தலாகும்.
ஜெனிவா உடன்படிக்கையின்படி போர்க்காலங்களில் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதை மீறி நடத்தப்படும் தாக்குதல்கள் ‘போர்க்குற்றங்களாக’ (War Crimes) கருதப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காமல், ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் போக்கை இந்தியப் பிரதமர் மாற்றிக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சில நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் இரட்டை நிலையை ஐநா கைவிட வேண்டும். அனைத்து நாடுகளும் ஐநா சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்.
இந்த எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான அனைத்து விரிவான ஏற்பாடுகளையும் புதுச்சேரி மாநில செயலாளர் வழக்கறிஞர் சாகுல் அமித் அவர்கள் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் AIMIM மாநிலத் தலைவர் ஜெ. சம்சுதீன் அவர்களுடன் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்:
லோகு அய்யப்பன் – தலைவர், திராவிட விடுதலைக் கழகம்.
கோ. ஜெகநாதன் – தலைவர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.
இரா. மங்கையர் செல்வன் – தலைவர், தமிழ் நிலவர் – விடுதலை வேங்கைகள்.
கோ. அபூகர் – தலைவர், தமிழ்க்களம்.
சீ.சு. சுவாமிநாதன் – தலைவர், தேசிய மக்கள் முன்னணி.
அ. பஷீர் அகமது – தலைவர், B.BOLD.
அ.செ. தீனா – தலைவர், பெரியார் சிந்தனையாளர்கள் இயக்கம்.
பி. பிரகாஷ் – தலைவர், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்.
ம. இளங்கோ – செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
மேலும், AIMIM கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஆர். மஜித் இன்டர்நேஷனல், மாநிலச் செயலாளர் முஹம்மது அஹமது, மாவட்டத் தலைவர் MY. பலுலுல்லா, மாவட்டச் செயலாளர் பாபு முகமது அலி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
“அமைதி நமது அடிப்படை உரிமை” என்பதை வலியுறுத்தி, உலக ஒற்றுமை மற்றும் மனிதகுல நலன் காக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election