சென்னையில் இருந்து முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்..
ஈரோடு.பிப். 15
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடா நிலையில் உள்ள சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை நினைவு மண்டப வளாகத்தில், பிரம்மாண்டமான அவரது சிலை நிறுவப்பட்டு காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து, இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை வீரத்துடன் எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர் சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை.
இவர் பட்டக்காரர் பரம்பரையில் மேலப்பாளையம் என்ற இடத்தில்1750 ஆண்டு பிறந்துள்ளார். இவரது இயற்பெயர் தீர்த்தகிரி என்பதாகும்.
இவர் தனது சிறு வயது முதலே ஆங்கிலேயரின் ஆட்சி முறையை எதிர்த்து இந்தியாவின் விடுதலைக்காக சிறு சிறு குழுக்கள் அமைத்து, ஆங்கிலேயர்களின் கண்களில் படாமல் மறைந்திருந்து அவர்களுக்கு எதிராக போராடி வந்தார். ஒரு கட்டத்தில் பெரும் படையை திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக கரூர் ஈரோடு அரச்சலூர் பகுதிகள் மற்றும் சங்ககிரி பகுதிகளில் வீரத்துடன் போராடி வெள்ளையர்களை விரட்டி அடித்தவர்.
கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த இவர், இன்றளவும் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் என மக்களின் வணக்கத்திற்குரிய முன்னோடியாக விளங்கி வருகிறார்.
ஆங்கிலேயர்களின் அடக்கு முறையை எதிர்த்தும் வரிகள் கட்ட மாட்டேன் என்றும் வீரத்துடன் எதிர்த்து போராடியவர். சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை இருக்கிறான் என்பதனை ஆங்கிலேயர்களுக்கு உணர்த்தியவர் மாவீரன் தீரன் சின்னமலை.
மிகப்பெரிய அளவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரத்துடனன் அவர் போராடியதால் அவருக்கு தீரன் என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது.
பல்வேறு போர் பயிற்சி முறைகளை சிறப்பான முறையில் கற்று தேர்ந்த அவரிடம் ஆங்கிலேயர்களால் எதிர்த்து போர் புரிய முடியவில்லை.
வீரம் நிறைந்த தீரன் சின்னமலை தனது சமையல்காரனால் காட்டிக் கொடுக்கப்பட்டு 1806 ஏப்ரல் மாதம் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் சங்ககிரியில் சிறை வைக்கப்பட்டார்.
18 05 ஆண்டு ஆடி 18 அன்று அவர் தூக்கிலிடப்பட்டார். அவருடன் அவரது சகோதரர் மற்றும் உடன் இருந்த சிலரும் தூக்கிலிடப்பட்டனர்.
இதுபோன்று நாட்டின் விடுதலைக்காக போராடிய பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு போற்றும் வகையில், இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் அந்த மாவீரர்களுக்கு அவர்களது பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு அவர்களின் திருஉருவ சிலை அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை வீரத்துடன் எதிர்த்து போராடி கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலைக்கு ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலை என்ற இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு அந்த மணிமண்டப வளாகத்தில் தீரன் சின்னமலை திருவுருவ சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அவரது நினைவை போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆடி 18 அன்று தமிழக அரசின் சார்பில் நினைவு விழா எடுக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நாளில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீரன் சின்னமலை வீரத்தை நினைவு கூறும் வகையில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் அவரது மணிமண்டபவளாகத்தில் அவருக்கு குதிரையில் அமர்ந்துள்ளது போல் ஒரு பிரம்மாண்டமான திருஉருவ சிலை அமைக்க வேண்டுமென, தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அவரது நினைவு மணிமண்டபவளாகத்தில் மிகப் பிரமாண்டமான தீரன் சின்னமலை குதிரையில் அமர்ந்துள்ளது போல் சிலை அமைக்க பட்டது.
சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலையின் இந்த பிரம்மாண்டமான திரு உருவ சிலையை சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதற்கான விழா ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சர் சு. முத்துசாமி, கொங்கு நாடு மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஈஸ்வரன் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் வி. சி சந்திரகுமார், டாக்டர் சி. சரஸ்வதி, ஏஜி வெங்கடாஜலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் வி. செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார், அரச்சலூர் பேரூராட்சி தலைவர் விஜயகுமார் மற்றும் தீரன் சின்னமலையின் வாரிசுதாரர்கள், அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்