அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 16 ஆவது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, இன்று (25.01.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்றையதினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மகளிர் சுய உதவிக்குழுவினர் வரைந்த விழிப்புணர்வு கோலங்களையும் பார்வையிட்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற்ற வாக்காளர் தின விழாவில் 16 ஆவது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அவர்களின் குறும்பட செய்தி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் வாக்காளர் தின விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளான உட்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான பணிகளை சிறப்பாக மேற்கொண்ட கணினி நிரலாளர்கள் மற்றும் உதவி கணினி நிரலாளர்களுக்கும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இதேபோன்று வாக்காளர் தின விழிப்புணர்வு ரங்கோலிப்போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கும், பின்னர் உட்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வில்லுப்பாட்டு குழுவினருக்கும், அரியலூர் தூய மேரி உயர்நிலைப்பள்ளி சாரணர்கள் மாணவர்களுக்கும், அரியலூர் சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கும், அரியலூர் அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஜெ.ஆர்.சி மாணவர்களுக்கும, வரதராஜன்பேட்டை டான்போஸ்கோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்களார்கள், மூன்றாம் பாலின வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் .இரத்தினசாமி, பொன்னாடை போற்றி மரியாதை செய்தார்.
பின்னர், வாக்காளர் உறுதிமொழியான “மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்.” உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமி, வட்டாட்சியர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!