கள்ளக்குறிச்சி நவ 23
தொழில்முனைவோர் ஆவதில் ஆர்வமும் உறுதியும் கொண்ட மகளிர் மற்றும்
திருநங்கையர்க்காக மேம்பட்ட பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய பிணையமில்லாக் கடன் வழங்கவும், அவர்களின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்தவும் தமிழ்நாடு மகளிர்
தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TamilNadu Women Entrepreneurs Empowerment Scheme – TWEES) 2025-26 முதல் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில் முனைவோராக்கிட இவ்வரசு உறுதி பூண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தொழில் முனைப்பு கொண்ட மகளிர் மற்றும் திருநங்கையர்க்கு
தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியும் தொழில் திறன் சார் பயிற்சியும் வழங்குவதோடு ரூ.10 இலட்சம் வரை திட்ட மதிப்பீட்டில் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் கொண்டு தொழில் புரிய பிணையமில்லாமல் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும். திட்டத்
தொகையில் 25% அதிகபட்சம் ரூ.2,00,000/- மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வாணிகத் தொழில்கள் எவற்றிலும் ஈடுபடலாம் எனினும் சுற்றுச்சூழலுக்கு இசைவான மக்கும் தன்மையுள்ள நாப்கின்கள் மற்றும்
கேரி பேக்குகள் தயாரித்தல், திடக்கழிவுகளிலிருந்து பயன்மிகு பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்கள், தையல், பானை வனைதல், சிற்பம் வடித்தல் போன்ற கைவினைத்
தொழில்கள், இன்டீரியர் டிசைனிங், ஃபேஷன் டிசைன் ஸ்டூடியோ, ஃபிட்னஸ் செண்டர்கள் உள்ளிட்ட புத்தினத் தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வணிக வங்கிகள், தாட்கோ வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கத் தகுதி
பெற்றவை. மகளிர் தொழில் முனைவோரின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்துவதற்கான
ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
18 முதல் 55 வயதிற்குட்பட்ட, தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கின்ற மகளிர் மற்றும்
திருநங்கையர் எவராயினும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். அடிப்படைக் கல்வி தகுதி
மற்றும் குடும்ப வருமான வரம்பு எதுவும் இத்திட்டத்தின் கீழ் விதிக்கப்படவில்லை. தகுதியும் ஆர்வமும் கொண்டோர் ஃபோட்டோ, வயதை உறுதி செய்ய ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, வங்கிக் கணக்கு விவரங்கள் இவற்றுடன்
www.msmeonline.tn.gov.in என்ற இணையப் பக்கம் வழியாக விண்ணப்பங்களைப் பதிவு
செய்யலாம்.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமும் தேவையும் உள்ள மகளிர் மற்றும் திருநங்கைகள் யாவரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும். திட்டம் குறித்த மேலான தகவல்களைப் பெறவும் விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனைகள்,
வழிகாட்டுதல் பெறவும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 95/2A2, ராஜா நகர், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04151-294057, 7760037120, 8248878219, 8825883896 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவோ தொடர்பு
கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!