அரியலூர் மாவட்டத்தில்
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு
கல்வி உதவித்தொகைகள் மற்றும் அடையாள அட்டைகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி,வழங்கினார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர்கள் 15 நபர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் 14 நபர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, இன்று (17.11.2025) வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, தாட்கோ சார்பில் நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டம் மற்றும் நிலம் மேம்பாட்டுத்திட்டம், தொழில் முனைவோர் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாக கடனுதவிகள் மற்றும் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் வாரிசுதார்களுக்கு திருமண உதவி, மகப்பேறு, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களும், வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர்களின் வாரிசுதார்கள் 10 நபர்களுக்கு தலா ரூ.1500 மதிப்பிலும், 3 நபர்களுக்கு ரூ.1000 மதிப்பிலும், 1 நபருக்கு ரூ.4000 மதிப்பிலும், 1 நபருக்கு ரூ.6000 மதிப்பிலும் என மொத்தம் 15 நபர்களுக்கு ரூ.28,000 மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளையும், 14 நபர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி,வழங்கினார்.
அதன்படி கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெற்று பயன்பெற்ற தூய்மை பணியாளர் சூசைமேரி என்பவர் தெரிவிக்கையில், நான் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறேன். எனது மகன் 12 ஆம் வகுப்பு மற்றும் எனது மகள் 10 ஆம் வகுப்பு கல்வி பயின்று வருகின்றனர். எனது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட கோரி எங்கள் ஊரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்துகொண்டு மனு அளித்தேன். எனது மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு இன்றையதினம் எனது இரண்டு குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையானது எனது குழந்தைகளின் கல்வி தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி என திருமதி.சூசைமேரி என்பவர் தெரிவித்தார்.
இதேபோன்று தூய்மை பணியாளர் ரோகினி என்பவர் தெரிவிக்கையில், நான் உடையார்பாளையம் வட்டம், கல்லாத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறேன். எனது மகள் 10 வகுப்பு பயின்று வருகிறார். அவரது கல்வி செலவுகளுக்காக உதவித்தொகை வேண்டி முகாமில் விண்ணப்பம் அளித்திருந்தேன். எனது கோரிக்கை மனுவினை ஏற்றுக்கொண்டு எனது மகள் கல்வி பயில்வதற்கு ஏதுவாக உதவித்தொகைக்கான காசோலை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தொகை எனது மகளின் கல்விக்கு பயனுள்ளதாக உள்ளது. உதவித்தொகை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி என ரோகினி என்பவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர்.மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் தேன்ராஜ், தாட்கோ மேலாளர் லோகநாதன், இதர அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!