August 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

“இன்னும் 25 ஆண்டுகள் தவெக ஆட்சி தான்” — அமைச்சர் ஆனந்த்

மணப்பாறை, ஆக. 22:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆண்டவர் கோவில் பகுதியில் உள்ள தனியார் திடலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில், அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள அரசாணையின்படி தூய்மை காவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,593 வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணியாற்றும் அனைத்து தற்காலிக ஊழியர்களுக்கும் வெளிமுகமை மூலம் ஊதியம் வழங்குவதைத் தவிர்த்து, நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்.

மேலும், அனைத்து தற்காலிக தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு, பொது வருங்கால வைப்பு நிதி, குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கான ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து மாநாட்டில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் கலந்து கொண்டு பேசியதாவது:

“உலகத்திலேயே தூய்மை காவலர்கள் போன்று சேவை செய்வதற்கு வேறு யாரும் இல்லை. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் சட்டமன்ற உறுப்பினராக ஆவதற்கு முன்பாக புதுச்சேரியில் 15 பேருடன் விசில் அடித்தபடி குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டேன். அப்போது தற்போதைய தமிழக முதலமைச்சரின் முகத்தை காட்டி பிரசாரம் செய்து நான் எம்.எல்.ஏ. ஆனேன்.

கொரோனா காலத்தில் சொந்தம், பந்தம் கூட அருகில் வராத சூழ்நிலையில், தூய்மை காவலர்களான நீங்கள் அனைத்து பணிகளையும் செய்தீர்கள். ஆனால் உங்களுடைய ஊதியம் மட்டும் வெறும் ரூ.6 ஆயிரமாக இருந்தது. அது ஏன் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு மனது வரவில்லை என்று தெரியவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. இதற்கு முன்பு திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்தனர். இப்போது எங்களைப் பார்த்தவுடன் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போலவே தமிழக வெற்றி கழகமும் ஏழைகளுக்கான கட்சி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சியினர் இனி போராடவே தேவையில்லை. வரும் காலங்களில் கம்யூனிஸ்டுகள் போராட வேண்டிய நிலையே இல்லாத வகையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இன்னும் 25 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான். தூய்மை காவலர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் கதிரவன், விக்னேஷ், ஏஐடியுசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி, வரவேற்புக் குழு செயலாளர் ராமலிங்கசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.