July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மத்தூர் ஊராட்சியில் தூர்நாற்றத்துடன் தேங்கும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள மத்தூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் முறையாகப் பராமரிக்கப்படாததால், கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகப் பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்தூர் ஊராட்சியின் முக்கியப் பகுதிகளான ராஜாவீதி, மேல்வீதி, கோட்டைதெரு, கீழ்வீதி, மசூதி தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அங்குள்ள சாக்கடை கால்வாய்கள் வழியாகச் செல்கிறது. கடந்த சில மாதங்களாக இந்தக் கழிவுநீர் கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாகக் கால்வாய்களுக்குள் செடிகொடிகளும் புதர்களும் மண்டி, கழிவுநீர் மேற்கொண்டு செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கியுள்ளது. இவ்வாறு தேங்கியுள்ள சாக்கடை நீரில் கொசுக்களும், புழுக்களும் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன. மேலும், தெருக்களின் ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளும் உடனுக்குடன் அகற்றப்படாததால், அப்பகுதி முழுவதும் கடுமையான தூர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மூலம் விநியோகிக்கப்படும் ஒகேனக்கல் கூட்டுத் குடிநீரில், சுத்திகரிக்கப்படாத ஆற்று நீர் கலந்து விடப்படுவதாகப் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இந்த நீரைக் குடிப்பதால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாகப் புலம்புகின்றனர்.

“சாக்கடை கால்வாய் அடைபட்டு துர்நாற்றமடிப்பதால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. கொசுத் தொல்லை தாங்கவில்லை. குடிக்கும் தண்ணீரும் சுத்தமாக இல்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். கால்வாய்களைச் சுத்தம் செய்து, தூய்மையான கூட்டு குடிநீரை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளனர்.