July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் இந்தியன் வங்கி அதிகாரிகளைக் கண்டித்து வங்கி வாடிக்கையாளர்கள் மாபெரும் கண்டனப் போராட்டம்!

புதுச்சேரி, ஜூலை 6, 2026:

‘அகில இந்திய வங்கி மற்றும் வங்கி சாரா வாடிக்கையாளர் நலன் மற்றும் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில், இந்தியன் வங்கி நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து இன்று (06.07.2026) புதுச்சேரிய கொக்கு பார்க் சிக்னல் அருகில் உள்ள
இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்திற்கு முன்பு மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

இன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வங்கி நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாடிக்கையாளர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

வங்கி அதிகாரிகள் SARFAESI சட்டத்தை முறையாகப் பின்பற்றாமல், வாடிக்கையாளர்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக ஏலம் விடுவதைத் தடுக்க வேண்டும். குறிப்பாக, சொத்து மதிப்பை வேண்டுமென்றே குறைத்துக் காட்டுவது மற்றும் நள்ளிரவு 1.00 மணி வரை ஏலம் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியன் வங்கி அதிகாரிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உத்தரவுகளை முறையாக மதிக்க வேண்டும். வாடிக்கையாளர் நலன் கருதி அறிவிக்கப்படும் சலுகைகளை வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து GST, சர்சார்ஜ் (Surcharge), பராமரிப்புக் கட்டணம் (Maintenance charge) மற்றும் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum balance) என்ற பெயரில் தன்னிச்சையாகப் பணம் பிடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.

சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க வேண்டிய வங்கி நிர்வாகம், தற்போது வாடிக்கையாளர்களை ஒரு கந்து வட்டி கும்பல் போலவும், சொத்து புரோக்கர்கள் போலவும் நடத்துவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

நீதிமன்றத் தடை உத்தரவு இருக்கும் சொத்துக்களை ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். கல்விக்கடன், ஸ்டார்ட்அப் (Startup) மற்றும் முத்ரா (Mudra) கடன்களைத் தடையின்றி இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், வங்கியின் ரசீதுகளைத் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

வங்கி வாடிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நிர்வாகத்தின் அத்துமீறல்களைக் கண்டித்தும் நடைபெற்ற இந்தப் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.