தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையின் மாஜி காவல் ஆய்வாளர் விமலா சஸ்பெண்ட் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. விமலா பணியிடை நீக்கத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஆலந்தூரிலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறை தலைமை அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் விமலா. இவர் சென்னை பெருநகரக் காவல்துறையில் பாலியல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய ராஜலட்சுமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தார். இந்த வழக்கின் ஆரம்பகட்ட கண்காணிப்பு விசாரணை மேற்கொண்டபோது, அவரிடம் லஞ்சக்கையூட்டுக் கேட்டதாக உள்துறை போலீசாரால் கண்காணிப்பில் தெரியவந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து இந்த விவகாரம் டிஐஜி என். தேவராணி, ஐபிஎஸ்., தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுத்துறையின் இயக்குநர் அருண், ஐபிஎஸ்-யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அடிப்படையில், கடந்த 17 ஆம் தேதியன்று விஜிலென்ஸ் காவல் ஆய்வாளர் விமலா இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதாக சந்தேகம் இருந்ததால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையின் துணை காவல் கண்காணிப்பாளர் ஜாய் தயாள் நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், காவல் ஆய்வாளர் விமலா இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், “காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய ராஜலட்சுமி என்பவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தேன் என்ற காரணத்துக்காக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுத்துறை மேல்பட்ட அதிகாரிகள் உள்நோக்கத்துடன் தன்னை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விமலா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது, நீதிபதி பிடி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிடி ஆஷா, “நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை வைத்து பார்க்கும் போது, காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையின் இயக்குநர் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதியே உத்தரவிட்டு இருக்கிறார். அதன்படியே மனுதாரர் விமலா, சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு எதிராக வரைவு எஃப்ஐஆர் தயாரித்து, இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்து இருக்கிறார்.
அந்த வரைவு எஃப்ஐஆரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையின் காவல் கண்காணிப்பாளர்(Sp) சில திருத்தங்களை செய்து ஒப்புதல் அளித்த பிறகே மனுதாரர் அந்த எஃப்ஐஆரை கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதியன்று பதிவு செய்து இருக்கிறார். எனவே சக காவல் ஆய்வாளர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தார் என்ற காரணத்துக்காக மனுதாரரை இடைநீக்கம் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது. இதனால் விமலா இடைநீக்கத்துக்கு வரும் ஜூலை 9 ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடுகிறேன் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையின் உயர் அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார். இந்த நிலையில் தான் இன்று தமிழ்நாடு அரசு சார்பில், விஜிலென்ஸ் மாஜி காவல் ஆய்வாளர் விமலா இடைநீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்