செய்தி அறிக்கை
நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்திற்கு ஒன்றிய பாஜக அரசு முழு பொறுப்பேற்று, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாநில திமுக வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: –
திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை ஒரு “சமூக அநீதி” என்று கருதி மிகத்தீவிரமாக எதிர்த்து வந்தது. நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், இத்தேர்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைத் தடுக்கும் “மரணப் பொறி” என்றும் சாடினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா கனிமொழி கருணாநிதி, நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளை முன்வைத்து, தகுதியை அளவிட இது சரியான அளவுகோல் அல்ல என்பதைத் தேசிய அளவில் உரக்கப் பேசினார். அதேபோல், தமிழ்நாட்டின் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் அவர்கள், நீட் தேர்விற்கு எதிராகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்ததுடன், சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் நீட் வேண்டாம் என்று தீர்மானமும் நிறைவேற்றினார். இது மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் ஒரு “சதி” என்று விமர்சித்து, தமிழக மாணவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிப்பதே திமுகவின் முதன்மையான இலக்கு எனவும் தெளிவு படுத்தினார். தி.மு.கழகம் நீட் விலக்கு, நம் இலக்கு” என்ற கையெழுத்து இயக்கத்தை துவங்கி, 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
2026-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பது, இந்திய கல்வித்துறையின் மாபெரும் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்ட நீட் தேர்வு முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது, லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் நம்பிக்கையை அடியோடு தகர்த்துள்ளது. பல ஆண்டுகளாக இரவு பகலாக கண்விழித்து, தங்கள் இளமைக் காலத்தின் அரிய தருணங்களைத் தியாகம் செய்து படித்து வந்த மாணவர்களின் உழைப்பு, வினாத்தாள் கசிவு என்ற ஒற்றைச் செய்தியால் வீணடிக்கப்பட்டுள்ளது. “பணம் இருந்தால் மட்டுமே மருத்துவர் ஆக முடியும்” என்ற நிலையை இத்தகைய முறைகேடுகள் உறுதிப்படுத்துவதுடன், தகுதியுள்ள மாணவர்களின் கல்விக்கனவை சிதைக்கும் கொடூரமான தாக்குதலாகவும் இது அமைந்துள்ளது.
கோச்சிங் சென்டர்கள் என்ற பெயரில் இயங்கும் நிறுவனங்கள், மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை வசூலிப்பதோடு மட்டுமல்லாமல், குறுக்கு வழியில் வெற்றி பெற வைக்கும் சூழ்ச்சிகளுக்கும் களம் அமைத்துக் கொடுக்கின்றன. திறமையை விட பண பலமே மருத்துவப் படிப்பைத் தீர்மானிக்கும் என்ற சூழல் உருவாவது, எதிர்கால மருத்துவத் துறையின் தரத்தையே கேள்விக்குறியாக்குகிறது. நேர்மையாகப் பயின்ற மாணவர்கள் இன்று சிபிஐ (CBI) விசாரணை மற்றும் மறுதேர்வு என்ற நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களின் மன நலனைப் பாதிப்பதுடன், ஒட்டுமொத்தத் தேர்வு முறையின் மீதான நம்பகத்தன்மையையும் குலைத்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலுக்கு ஒன்றிய அரசாங்கத்தின் அலட்சியப் போக்கும், தேர்வு முகமையின் போதிய பாதுகாப்பு இல்லாத திட்டமிடலுமே முதன்மைக் காரணமாகும். கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இத்தகைய குளறுபடிகள், மாணவர்களின் லட்சியங்களின் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதலாகவே கருதப்படுகிறது. சிபிஐ விசாரணை ஒருபுறம் இருந்தாலும், இழந்த காலத்தையும் மாணவர்களின் மன உறுதியையும் யாரால் ஈடுகட்ட முடியும்? அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தால், ஒரு தலைமுறையின் மருத்துவக் கனவு இன்று கேள்விக்குறியாகி, கண்ணீரில் நிற்கிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற குரல் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
ஆகவே, நீட் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், இதற்கு ஒன்றிய பாஜக அரசு முழு பொறுப்பேற்று, ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கும் விதத்தில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தி.மு.கழகத்தின் நோக்கம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!