July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா இடைநீக்கம் தடை வழக்கில்: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு..!!

தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையின் மாஜி காவல் ஆய்வாளர் விமலா சஸ்பெண்ட் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. விமலா பணியிடை நீக்கத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ஆலந்தூரிலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறை தலைமை அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் விமலா. இவர் சென்னை பெருநகரக் காவல்துறையில் பாலியல் தடுப்பு பிரிவு காவல் ஆய்​வாள​ராகப் பணியாற்றிய ராஜலட்​சுமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தார். இந்த வழக்கின் ஆரம்பகட்ட கண்காணிப்பு விசாரணை மேற்கொண்டபோது, அவரிடம் லஞ்சக்கையூட்டுக் கேட்டதாக உள்துறை போலீசாரால் கண்காணிப்பில் தெரியவந்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இந்த விவகாரம் டிஐஜி என். தேவராணி, ஐபிஎஸ்., தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுத்துறையின் இயக்குநர் அருண், ஐபிஎஸ்-யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அடிப்படையில், கடந்த 17 ஆம் தேதியன்று விஜிலென்ஸ் காவல் ஆய்வாளர் விமலா இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதாக சந்தேகம் இருந்ததால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையின் துணை காவல் கண்காணிப்பாளர் ஜாய் தயாள் நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், காவல் ஆய்வாளர் விமலா இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், “காவல் ஆய்வாள​ராகப் பணியாற்​றிய ராஜலட்​சுமி என்பவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​தேன் என்ற காரணத்​துக்​காக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுத்துறை மேல்பட்ட அதிகாரிகள் உள்​நோக்​கத்​துடன் தன்னை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். என்று சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் விமலா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது, நீதிபதி பிடி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி பிடி ஆஷா, “நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்டுள்ள ஆவணங்களை வைத்து பார்க்கும் போது, காவல் ஆய்​வாளர் ராஜலட்​சுமி மீது எஃப்​ஐஆர் பதிவு செய்ய தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையின் இயக்​குநர் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதியே உத்தரவிட்டு இருக்கிறார். அதன்​படியே மனு​தா​ரர் விமலா, சம்​பந்​தப்​பட்ட ஆய்வாள​ருக்கு எதி​ராக வரைவு எஃப்ஐஆர் தயாரித்​து, இயக்​குநரின் ஒப்​புதலுக்​காக அனுப்பி வைத்​து இருக்கிறார்.

அந்த வரைவு எஃப்ஐஆரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையின் காவல் கண்காணிப்பாளர்(Sp) சில திருத்​தங்களை செய்து ஒப்புதல் அளித்த பிறகே மனு​தா​ரர் அந்த எஃப்​ஐஆரை கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதியன்று பதிவு செய்​து இருக்கிறார். எனவே சக காவல் ஆய்​வாளர் மீது எஃப்​ஐஆர் பதிவு செய்​தார் என்ற காரணத்​துக்​காக மனு​தா​ரரை இடைநீக்​கம் செய்திருப்பது உள்​நோக்​கம் கொண்டதாகவே தெரி​கிறது. இதனால் விமலா இடைநீக்கத்துக்கு வரும் ஜூலை 9 ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடுகிறேன் என்று உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்​கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையின் உயர் அதி​காரி​கள் பதில் அளிக்க வேண்​டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார். இந்த நிலையில் தான் இன்று தமிழ்நாடு அரசு சார்பில், விஜிலென்ஸ் மாஜி காவல் ஆய்வாளர் விமலா இடைநீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது.