கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த என்.தட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் (18). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை இவரது வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களை பேருந்து ஏற்றி விடுவதற்காக, மாதேஷ் தனது இருசக்கர வாகனத்தில் வேலம்பட்டி கிராமம் வரை சென்றுள்ளார். உறவினர்களை பேருந்தில் அனுப்பி வைத்த பின்னர், அவர் மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டார்.
அவர் சென்றாயம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது, எதிரே எதிர்பாராதவிதமாக வந்த அரசு பேருந்து, மாதேஷின் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாதேஷ், பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து நடந்த சாலையின் இருபுறமும் புளியமரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் சரிவரத் தெரியாத அளவுக்கு சாலை வளைவு மறைக்கப்பட்டுள்ளதே இந்த இக்கட்டான விபத்துக்கு முக்கியக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த நாகரசம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்