July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புத்தாநத்தம் அருகே சாலை சீரமைக்கக் கோரி மாணவர்கள், பொதுமக்கள் திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

திருச்சி, ஜூலை 13:

திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே உள்ள எளமனம் – கண்ணுத்து செல்லும் சாலை பல ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது. மேலும், பள்ளி மாணவர்கள் தினமும் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டியிருப்பதால், பாதுகாப்பு குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், திங்கள்கிழமை காலை எளமனம் பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் காரணமாக அந்த வழியாக சென்ற பேருந்துகள், பள்ளி வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலையை விரைவில் ஆய்வு செய்து சீரமைக்கும் பணிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்களும் மாணவர்களும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

எளமனம் – கண்ணுத்து சாலையை உடனடியாக சீரமைத்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.