புதுச்சேரி, நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் புது காலணியை சேர்ந்தவர் அருண். அவர் மனைவி நதியா. இவர்களுக்கு 3 மாதம் முன் ஆண் குழந்தை பிறந்தது.
அனுஷ் என்ற அந்த குழந்தைக்கு கடந்த டிசம்பர் 4ம் தேதி நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2வது தடுப்பூசி போடப்பட்டது.
அதனால் குழந்தைக்கு காய்ச்சல் உண்டானது.
முறையான மருத்துவ வசதி கிடைக்காததால் அந்த குழந்தை டிசம்பர் 5ம் தேதி இறந்தது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் இன்று நேரில் சந்தித்தார்.
இறந்த குழந்தையின் படத்தைக் காட்டி பெற்றோர்களும், உறவினர்களும் அழுதனர். அவர்களுக்கு ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆறுதல் கூறினார்.
மேலும் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், எல்.ஜே.கே. கட்சி பொது செயலாளர்கள் பூக்கடை ரமேஷ், பிரபாகரன், மண்டல பொது செயலாளர் முனைவர் கண்ணபிரான், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தது குறித்து எல்ஜேகே தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியது, பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினோம். எங்களால் முடிந்த உதவி செய்தோம். ஆனால் புதுச்சேரி அரசு நெட்டப்பாக்கம் மருத்துவமனைக்கு இன்னும் டாக்டர்களை நியமிக்கவில்லை. குழந்தையின் உடல் கூராய்வு அறிக்கை கூட இதுவரை தரவில்லை.
ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இந்த அளவு அலட்சியமாக இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. ஓட்டு போட்ட மக்களுக்கு உதவி செய்யாமல் இருப்பது துரோகம். வரும் தேர்தலில் மக்கள் இதற்கு மீண்டும் வாக்குகள் மூலம் பதில் அளிப்பார்கள் என்று கூறினார்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!