June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில்திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்வது என்றுசெயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் !

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்ட காரணத்தால் தலைமைக் கழகத்தால் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பது என்று திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தட்டாஞ்சாவடி தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் அத்தொகுதிக்கு உட்பட்ட செயிண்ட்பால்பேட் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்றிரவு 7.00 மணிக்கு நடந்தது.
மாநில அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அ. செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், தொகுதி பொறுப்பாளரும், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளருமான டாக்டர் ரோ. நித்திஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் ஆறுமுகம் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாநில அமைப்பாளர் இரா. சிவா பேசியதாவது: –
தமிழகத்தில் விசில் சத்தத்தில் நாம் ஏமாந்துவிட்டோம். இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்ற திமுக தலைவர் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்த கொளத்தூரில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். அதற்கும் விசில் தான் காரணம். விசில் சத்தம் கொஞ்சம், கொஞ்சமாக அடங்க தொடங்கி மக்கள் தெளிவாகி வருகின்றனர். தமிழகத்தில் டயலாக் பேசும் முதல்வர் ஆட்சி புரியும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதுபோல் வில்லியனூர் தொகுதியில் 600 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தினேன். அதன் காரணமாக மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பி இருந்தேன். ஆனால் மக்கள் கவர்ச்சிக்கு ஆசைப்பட்டு குறிப்பாக பெண்கள் அதிகளவில் விசிலுக்கு வாக்களித்த காரணத்தால் நான் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.
திமுகவை எதிர்த்த அதிமுக இன்று கட்சியை காப்பாற்றினால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தலைவர் யாரை வேட்பாளராக நிற்க வைக்கிறாரோ அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக திட்டமிட்டு கடுமையாக உழைக்க வேண்டும். மக்களை சந்திக்கும்போதே அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் நட்சத்திர அந்தஸ்தோடு செல்ல வேண்டும். கொள்கை, இன உணர்வு, மொழி உணர்வுள்ள மாபெரும் இயக்கம் திமுக. இடைத்தேர்தலில் யார் எதிர்த்து போட்டியிட்டாலும் கவலைப்படாமல் நாம் அனைவரும் தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலோடு தீவிரமாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு, மாநில மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மதிமாறன், மாநில துணை அமைப்பாளர்கள் பிரகாஷ், சுரேஷ், தொகுதி அவைத்தலைவர் கணேசன், தொகுதி நிர்வாகிகள் பழநிசாமி, குடியரசு, திருலோகு, சுகுணா, இளங்கோ, சங்கர், முருகையன், சந்தோஷ், பாலாஜி, முத்துகுமார், விக்டோரியா, நடராஜன், ராமமூர்த்தி, அய்யனார், வெங்கடேசன் உள்ளிட்ட 200 கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இடைத்தேர்தலில் தலைமைக் கழகத்தால் நிறுத்தப்படும் வேட்பாளரை கண்டிப்பாக வெற்றி பெற செய்து என்று தீர்மானம் ஒருமனதாக இயற்றப்பட்டது.