புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் குறித்து, புதுச்சேரி 10 ரூபாய் சட்ட இயக்கத்தின் நிறுவனர் ரகு என்கின்ற ரகுநாதன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அண்ணா சிலை அருகே நூதன முறையில் போராட்டம் நடத்தினார்.
முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து பங்கேற்காததால், புதுச்சேரிக்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரகுநாதன் குற்றம்சாட்டினார். “மாநாட்டிற்குச் சென்று கேட்கும்போதுதான் உரிமைகளையும் திட்டங்களையும் பெற முடியும்; மாநில அந்தஸ்தையும் நேரில் சென்று வலியுறுத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் பதவியை இளைய தலைமுறைக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும், புதுச்சேரியின் நிர்வாகம் மற்றும் வளர்ச்சி தொடர்பாக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் அமுதசுரபி, பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட நிறுவனங்களின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான நிதி நிலை குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
அரியாங்குப்பத்தில் உள்ள பழமையான சுயம்பு புற்றுக்கோவில் தொடர்பாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கோவில் மற்றும் சிலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
புதுச்சேரியில் காலாவதியான மற்றும் போலி மருந்துகள், போலி பத்திரங்கள், கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் ரகுநாதன் குற்றம்சாட்டினார். மண்ணின் மைந்தர்கள் புதுச்சேரியில் வாழ முடியாத நிலை ஏற்படக்கூடாது; மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நூதன முறையில் போராட்டம்
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பின்பக்கம் திரும்பி அமர்ந்து நூதன முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இயக்கத்தின் நிறுவனர் ரகு என்கின்ற ரகுநாதன், தனது சட்டையை கிழித்துக்கொண்டு கையில் தட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது இந்த நூதன போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநில அந்தஸ்து, புதுச்சேரியின் நிர்வாகம், மக்கள் உரிமைகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
— ரகு என்கின்ற ரகுநாதன்
நிறுவனர், புதுச்சேரி 10 ரூபாய் சட்ட இயக்கம்

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…