June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

​புதுச்சேரி ஆசிரியர் போராட்டம்: மரத்தில் ஏறி சமூக ஆர்வலர் ‘தூக்கிட்டு’ நூதன போராட்டம் – பரபரப்பு!

​புதுச்சேரி:

புதுச்சேரியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், இன்று ஆசிரியர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தர்ராஜன் மேற்கொண்ட நூதனப் போராட்டம் கல்வித்துறை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

​கடந்த 9 நாட்களாக கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அங்கு வந்த சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தர்ராஜன், திடீரென அங்கிருந்த ஒரு மரத்தில் ஏறி, கழுத்தில் கயிறு மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வது போல நூதன முறையில் தனது போராட்டத்தைப் பதிவு செய்தார்.

​சுந்தர்ராஜனின் இந்த செயலால் அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு, அவரை மரத்திலிருந்து கீழே இறக்க முயன்றனர்.
​அப்போது, எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து சுந்தர்ராஜன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

​இந்தச் சம்பவத்தால் கல்வித்துறை வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. ஆசிரியர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், சமூக ஆர்வலரின் இந்த அதிரடி முயற்சி புதுச்சேரியில் பேசுபொருளாக மாறியுள்ளது.