June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

​பணி நிரந்தரம் கோரி புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர்கள் 25-வது நாளாக போராட்டம்: உண்ணாவிரத பந்தலுக்கு நேரில் வந்து வைத்திலிங்கம் எம்பி ஆதரவு!

​புதுச்சேரி:

புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் 292 ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் பாலசேவிகா ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி 21-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் இன்று 25-வது நாளை எட்டியுள்ளது.
​இதன் ஒரு பகுதியாக, அண்ணா சிலை அருகே கடந்த 13-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இரண்டு நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (பிப். 14) இரண்டாவது நாளை எட்டியது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

​இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வைத்திலிங்கம் எம்பி இன்று நேரில் வருகை தந்தார். போராட்டக் களத்தில் ஆசிரியர்களிடையே பேசிய அவர் கூறியதாவது:
​”ஆசிரியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. தேர்தல் முடிந்து இவ்வளவு காலம் ஆகியும், இந்த அரசாங்கம் ஏன் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துகிறது என்பது புரியவில்லை. உங்கள் மீது ஏதோ ஒரு கோபத்தை அரசாங்கம் திணிக்கிறது.
​பணி நிரந்தரம் வழங்காவிட்டாலும் பரவாயில்லை, போராடும் ஆசிரியர்களை அழைத்து ஒரு பேச்சுவார்த்தை கூட நடத்தாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்? தற்காலிக தீர்வு, நிரந்தர தீர்வு என இரண்டையும் பிரித்து பார்த்துச் சரியாகச் செய்ய வேண்டும். தயவுசெய்து ஆசிரியர்களை அழைத்து அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்.”

​முன்னதாக, இப்போராட்டத்திற்கு ஆதரவாகப் புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர் திரு. N. பாலகுமார், தலைமை ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. A. சிரில் நிக்கோலஸ், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. N. பொற்செழியன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.
​அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது அறப்போராட்டம் ஓயாது என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.