மத்தூர், ஜூலை 7:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் நீண்ட நாட்களாக சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசியதுடன் சுகாதார சீர்கேடும் நிலவி வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி, தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர்.

இந்த அவலநிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வகையில், “நீதிகதிர் எக்ஸ்பிரஸ்” காலை நாளிதழில் நேற்று விரிவான செய்தி மற்றும் புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி சமூக வலைதளங்களிலும் பரவலாக கவனம் பெற்றதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது.
அதன் எதிரொலியாக இன்று காலை முதலே பொக்லைன் இயந்திரம், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, சாக்கடை கால்வாய்களில் தேங்கியிருந்த கழிவுகள் மற்றும் மண் மேடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணியால் பல நாட்களாக நிலவி வந்த சுகாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதால், அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தி வெளியான ஒரே நாளில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்ததற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்ததுடன், மக்கள் பிரச்சினைகளை அச்சமின்றி வெளிக்கொண்டு வந்து தீர்வு கிடைக்கச் செய்து வரும் “நீதிகதிர் எக்ஸ்பிரஸ்” நாளிதழுக்கும், இச்செய்தியை தொகுத்து வெளியிட்ட செய்தியாளர் முபாரக் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
மேலும், இதுபோன்ற அடிப்படை வசதி குறைபாடுகள் மீண்டும் ஏற்படாத வகையில் சாக்கடை கால்வாய்களை முறையாக பராமரித்து, தூய்மைப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்