திருவள்ளுவர் நமக்கு தந்த திருக்குறள் என்பது, தமிழ் மட்டும் அல்ல வாழ்வியல் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதில் திரண்டு இருக்கும் ஒட்டு மொத்தக் கருத்துக்களும், மக்களாய் பிறந்த அனைவரும் மக்கட் பண்போடு வாழ வேண்டும் என்பது தான். இதனை எனது ஆசான் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விஸ்வநாதம் அவர்கள் அடிக்கடி கூறுவதுண்டு.
அப்படிப்பட்ட திருக்குறளில் ஒரு அதிகாரம் படித்தால் அது நமக்கு கண்ணாடி போன்றது. ஒவ்வொரு அதிகாரமும் நமக்கு தரப்படுகிற கண்ணாடி, அந்த கண்ணாடியில் நம் முகம் தெரிய வேண்டும் என்பார் அய்யா கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள்.
உதாரணத்திற்கு இப்போது அழுக்காறாமை என்னும் அதிகாரம் படித்தால், எத்தனை சதவீதம் இது நமக்குள்ளே அழுக்காறு என்கிற பொறாமை இருக்கிறது என்று இந்த அதிகாரத்தை வைத்து பார்த்து கொள்ளலாம்.
மறவர்கள் நம்மை பார்த்து உனக்கு பொறாமை இருக்கிறது என்று சொன்னால் நமக்கு எவ்வளவு கோவம் வரும். இதையே திருக்குறள் வழியில் பார்த்தால் நம்மை நாமே பொருத்தி பார்க்கலாம், இன்னொருவன் நம்மை நோக்கி கை நீட்டி உனக்கு பொறாமை இருக்கிறது என்று சொல்ல மாட்டான். அது நமக்கு ஒரு நிம்மதி.
ஆகவே நாம் நம்மை திருக்குறளை வைத்து எப்போதும் பொருத்தி பொருத்தி பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அறமாக வாழ்வதற்கு வழி என்ன என்றால், முதலில் நம் நெஞ்சு நமக்கு நீதி சொல்கிற நெஞ்சாக இருக்க பழக்க வேண்டும். நம்முடைய மனம் நமக்கு நீதிபதியாக இருக்க வேண்டுமே தவிர வக்கீலாக இருக்க கூடாது. வக்கீலாக இருந்தால் என்னுடைய பிழைகளுக்கான நியாயங்களை எடுத்து சொல்லி சொல்லி நம்மை அதிலிருந்து காப்பாற்ற பார்க்கும். நீதிபதியாக இருந்தால் “இது பிழை” என்று உறுதி பட சொல்ல வேண்டும். அப்படி பட்ட மனம் படைத்தவன் அறம் வைத்து பிழைக்க மாட்டான்.
இதையே தான் திருவள்ளுவர் சொல்கிறார்….., தன் நெஞ்சு அறிவது பொய்யற்க அதாவது, உன்னுடைய மனதிற்கு பிழை என்று ஒன்று தெரிந்து விட்டால், அதை உடனடியாக திருத்து, அதற்கு பிறகு நியாயங்களை சொல்லி உன்னை நீ ஏமாற்றி கொள்ளாதே. மற்றவர்களை ஏமாற்றலாம் ஆனால் உன்னை நீ ஏமாற்றிக் கொள்ளாதே.
அப்படி ஏமாற்றி கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக நம் மனதிலே பிழைகள் சேர்ந்து சேர்ந்து ஒரு குப்பை தொட்டியாக மாறி விடுவோம். ஆகவே நம் குப்பைகளை நாம் நீக்க வேண்டும், இதற்கு திருக்குறள் ஒரு கண்ணாடி என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
நிலை கண்ணாடியை பார்த்து நம் முகத்தில் கருமை வந்திருக்கிறது என்று ஏதேதோ க்ரீம் போட்டு சரி பண்ணுகிறோம். அது போல திருக்குறள் என்கிற கண்ணாடி யை பார்த்து நாம் இதிலே சரி இல்லை, அதிலே சரி இல்லை என்று திருத்திக்கொண்டால் புற அழகு மாத்திரமல்ல அக அழகும் மாறி விடும். புற அழகை காட்டிலும் அக அழகு தான் அழகு.
ராமாயணத்தில், குகன் ஒரு வேடன், அவன் வந்தாலே மீன் வாடை அடிக்குமாம் அவன் பார்த்தால் கண்ணில் இருந்து நெருப்பு பொறி பறக்குமாம், புற அழகு ஒன்றுமே இல்லை, ஆனால் அவன் ராமனை பார்த்து அவன் மீது காட்டிய அன்பை படித்த பிறகு, நமக்கு குகன் ஒரு அழகானக தெரிகிறான், வெளி தோற்றத்தில் மிக அழகாக இருக்கிற சிலரை நெருங்கி பார்த்தால் அசிங்கமாக நடந்து கொள்வார்கள், ஒரு நாளுக்கு பிறகு அவர்கள் பக்கத்திலே வாழ கூட முடியாது, அவர்கள் வார்த்தை அசிங்கமா இருக்கும், அவர்கள் எண்ணம் அசிங்கமா இருக்கும், இதை பார்த்தால் இவனையா ஒரு பெரிய மனிதர் என்று நாம் நினைத்தோம் என்று நம் உள்ளத்தில் தோன்றும். இன்றைக்கு ஊடகங்கள் எல்லாம் வந்து அத்தகையவர்களுக்கு தான், நல்ல வெளிச்சம் கொடுக்கிறது, அப்படி வெளிச்சம் வந்ததாலே தான், எல்லாம் பெரியவர்கள் போல தோன்றுகிறார்கள்.
திருவள்ளுவராலும் கம்பராலும் ஔவையாராலும் வழி படுத்தப்பட்ட தமிழினம், இன்றைக்கு பொய்யர்களால் வழி படுத்தபடுகிறது என்பதை நினைக்கும் போது மனம் வேதனைப் படுகிறது.
பிழை எவ்வளவு பெரிதாகவும் இருக்கலாம், சமுதாயத்தில் பெரும்பாலும் பார்த்தால் பிழை தான் பெரும்பான்மையாக இருக்கும். ஆனால் அளவாலே பெருத்து இருப்பதால் அது பற்றி நாம் அச்சப் பட தேவை இல்லை, எவ்வளவு தான் பிழை பெரிதாக இருந்தாலும் ஒரு சின்ன சரி அந்த பிழையை நீக்கி விடும், வீடு முழுக்க இருட்டு இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள், ஒரு மின்சார விளக்கை போட்டு விட்டால் ஒளி வந்து விடுகிறது, இவ்வளவு இருட்டை நீக்க நிறைய மின்சார விளக்கு தேவை இல்லை ஒரு குமிழ் போதும்.
அது போல் நாம் தீமையோடு போராடுவதற்கு கஷ்டப் படுவதை விட, நன்மையை நமக்குள்ளே கொண்டு வருவதற்கு சிரமப்பட்டோமானால், அது அடுத்த அடுத்த நன்மைகளைத் தானே கொண்டு வரும் என்பதில் ஐயம் இல்லை.
அதற்கு தான் திருவள்ளுவர் சமூக மனிதனாக வர வேண்டுமா முதலில் மனதை சுத்தம் செய், அதாவது மற்றவனை பார்த்து நீ பொறாமை படுவதை நிறுத்த வேண்டும், என்று வலியுறுத்துகிறார்.
அது மட்டும் அல்ல, எல்லா அதிகாரங்களிலும் நம்மை நாமே பட்டை தீட்டிக் கொள்வதற்கு வழி வகுத்து கொடுக்கிறார்.
திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துபால் என்று மூன்று பாட்களாக பிரித்து, நூற்றி முப்பது மூன்று அதிகாரங்களை வகுத்து, அதற்குள்ளே ஆயிரத்து முன்னூற்றி முப்பது வைரக் கற்களாக குறள்களை பொதித்து தமிழன்னைக்கு மகுடம் சேர்த்து இருக்கிறார் திருவள்ளுவர்.
அதில் அறத்துப்பாலுக்குள்ளே குள்ளே நான்கு இயல்களை வைக்கிறார், பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல் என்று.
அடுத்து பொருட்பாலில், அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என்று ஏழு இயல்களை வகுக்கிறார்
அதற்கடுத்து இன்பத்துப்பாலில் களவியல், கற்பியல் என்று இரண்டு இயல்களை வகுக்கிறார்
பாயிரவியலில் நான்கு அதிகாரம் வைக்கிறார், அது மொத்த திருக்குறளையும் விளங்க படுத்துகிற பகுதி, கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்கிற நான்கையும் வைத்து, முதலில் கடவுள், அதற்கு பிறகு அவனாலே படைக்கப் பட்ட இயற்கையான வான் சிறப்பு, அந்த இயற்கைகுள் பொதிந்து இருக்கும் ரகசியங்களை சொல்ல அல்லது கண்டுபிடித்து நமக்கெல்லாம் சொல்லக் கூடிய முற்றும் துறந்த துறவிகள், பின்னர் அவர்களாலே சொல்லப்பட்ட அறம் இந்த நான்கையும் பாயிரவியலுக்குள்ளே சொன்னார்
அதற்கு பிறகு அறம் இரண்டு வகைப்படும் அவை இல்லறம் இன்னொன்று துறவறம் என்று இரண்டாக பிரித்து, இல்லறம் துறவறத்திற்கு ஒரு வாயிலாக இருக்கிற படியால், இல்லறத்தை முதற்கண் கூற தொடங்குகிறார் என்று பரிமேலழகர் தனது உரையின் வாயிலாக சொல்கிறார்.
இல்லறதில் இருந்து அடிப்படை அறம் தோன்றுகிறது, அறத்தின் நோக்கம் என்ன என்றால், அன்பை வளர்ச்சி பெற செய்வது. அதனால் தான் இல்லறதிற்கு லட்சணம் சொல்லும் போது “அன்பும் அறனும் உடைத்தாயின் பண்பு பயனும் அது” என்றார். இல்லறதிற்கு பண்பாக அன்பும், பயனாக அறமும் இருக்க வேண்டும் என்று பரிமேலழகர் விளக்கம் தருகிறார்.
ஆகவே அற வளர்ச்சி என்பது அன்பு வளர்ச்சி. சமூகத்தில் இல்லறம் வேறு துறவறம் வேறு என்று பிரிக்க தேவை இல்லை, இல்லறம் என்பது துறவறத்திற்கு ஒரு பாதை, எப்படி இல்லறம் துறவறத்திற்கு பாதை என்றால், பரிமேலழகர் சொல்லி இருக்கும் அதிகார வைப்பு முறையை விளங்கிக் கொண்டாலே தெளிவு பட விளங்கி கொள்ளலாம்.
பரிமேலழகர் என்கிற மாபெரும் அறிஞன் மாத்திரம் இல்லை என்றால் திருவள்ளுவர் தந்த இந்த திருக்குறள் மறையை அதாவது தமிழ் வேதத்தை அறிந்து கொள்வது மிகவும் கடினமானதாக இருந்திருக்கும்.
இப்படிப்பட்ட திருக்குறள் என்கிற ஞானப் பெட்டகத்தை, நம் அன்றாட வாழ்வோடு பொருத்தி வாழ்வோமானால் தர்மம் நிலைக்கும், நம் வாழ்வு செழிக்கும்.
“திருக்குறள் இளம் புலமையர்”
கே.பி. ரோகித்கணேஷ்
(சொற்பொழிவாளர், கட்டுரையாளர் )
145, மின்னப்பன் தெரு,
உறையூர், திருச்சி – 620003
அலைபேசி : 9894969558

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!