June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,26/06/2026.

சேலத்தில் பட்டப்பகலில் துணிகரம் – மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து 26 பவுன் நகை,வெள்ளி கொள்ளை.

சேலம்,ஓமலூர் அருகே பட்டப்பகலில் சித்த மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து, 26 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (45). சித்தா மருத்துவரான இவர், ஓமலூர் அருகே காருவள்ளி சின்னதிருப்பதி கோயில் அர்ச்சகராகவும் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி ஜனனி. இவர்களது மகள் மற்றும் மகன், சேலம் மன்னார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருவதால் குடும்பத்தினர் அங்கேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர். விஜயராகவன் மட்டும் தாராபுரத்தில் தங்கி, தனது பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை, விஜயராகவன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக, சேலத்திற்கு சென்றுள்ளார்.

இதனால் தாராபுரத்தில் உள்ள வீடு பூட்டிக்கிடந்தது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.பின்னர், வீட்டில் இருந்த 3 பீரோக்களையும் உடைத்து, அதில் இருந்த 26 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், வைரக்கற்கள் பதித்த நெக்லஸ் என சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

வீடு திரும்பிய விஜயராகவன், கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

அதன் பேரில், ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரித்தனர்.

பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து, ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஓமலூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed