June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,13/04/2026.

சேலத்தில் சென்னை சேர்ந்த மாஜி எஸ்பியிடம் ரூ.60 லட்சம் மோசடி – பெண் உள்பட 2 பேர் அதிரடி கைது.

சேலம்,ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதாக கூறி ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பியிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை அடுத்த பல்லாவரம் அருகே பம்மல் பகுதியை சேர்ந்தவர் ஹயாத் (65), ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பி. இவர், சேலம் சுக்கம்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது வெங்கடாசலத்தின் மனைவி சின்னதங்கம் (42), ரியல் எஸ்டேட் தொழிலை ஜலகண்டாபுரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (45) என்பவருடன் சேர்ந்து செய்து வந்துள்ளார். அந்த ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை முதலீடு செய்தால், அதிக லாபத்துடன் திரும்ப தருவதாக ஓய்வு கூடுதல் எஸ்பி ஹயாத்திடம் சின்னதங்கம் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய ஹயாத், கடந்த 2022ம் ஆண்டு சின்னதங்கத்திடம் ரூ.20 லட்சமும், சுப்பிரமணியிடம் ரூ.40 லட்சமும் கொடுத்து ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்ய கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்ற 2 பேரும், தங்களது தொழிலை பெருக்கிக் கொண்டதோடு, அதன்மூலம் கிடைத்த லாபத்தையோ, கொடுத்த ரூ.60 லட்சம் பணத்தையோ ஹயாத்திற்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி கௌதம்கோயலிடம் ஓய்வு கூடுதல் எஸ்பி ஹயாத் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஓய்வு கூடுதல் எஸ்பி ஹயாத்திடம் ரியல் எஸ்டேட் தொழில் முதலீடு என ரூ.60 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு, 3 ஆண்டுகளுக்கும் மேலாக திரும்ப கொடுக்காமல் மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் சுப்பிரமணி, சின்னதங்கம் மீது மோசடி, கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் நேற்று, சுப்பிரமணி (45), சின்னதங்கம் (42) ஆகிய 2 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய மற்றும் பெண்கள் கிளைச்சிறையில் அடைத்தனர்.