யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியர் விளக்கம்.
சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற படித்தவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து, ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழ்நாடு அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
யாருக்கு எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்?
மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300/- மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு ரூ.400/- பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600/-வீதம் காலாண்டிற்கு ஒருமுறை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பத்தாம்வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/- மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/- மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000/- வீதம் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் அரசின் பிறதுறை சார்ந்த நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. உதவித்தொகை விண்ணப்பபடிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீள விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவார்கள்.
ஜனவரி 2026 முதல் மார்ச் 2026 வரையிலான காலாண்டிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
புதிய தொழிற்பள்ளிகளுக்கான அறிவிப்பு
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் 2026-2027 ஆம் புதிய கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது, 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000/- மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000/- செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 28.02.2026 ஆகும். இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு Directorate, Chennai Email ID detischennai@gmailcom மற்றும் Salem Regional Joint Director Email ID rjdtslm@gmailcom ஆகிய மின்னஞ்சல் முகவரிகளை அணுகலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.