June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சாயப்பட்டறை உரிமையாளர்களின் பண ஆசையால் பாழாய் போகும் பள்ளிபாளையம்….

வேடிக்கை பார்க்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். காரணம் என்ன…?

ஈரோடு. மே. 22

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய மற்றும் சலவை ஆலைகளால் நீர் நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டு பள்ளிபாளையம் பகுதி பாழாய் போய்விட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள் மற்றும் சலவை பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளிபாளையம் பகுதியில் கடந்த சுமார் 30 ஆண்டுகளாக இத்தகைய சாய மற்றும் சலவைப் பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கடந்த 15 ஆண்டு காலமாக இந்த சாய, சலவை பட்டறைகள் மிக அதிக அளவில் வீரியத்தோடு செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக இங்குள்ள நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள் இருந்து ரசாயனம் கலந்த சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீர் நேரடியாக அருகில் உள்ள காவேரி ஆற்றில் விடப்பட்டு, அங்கு ஆற்று நீரில் கலக்கிறது.

இதன் காரணமாக காவிரி ஆற்று நீர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆற்றில் உள்ள மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுவதோடு, காவேரி ஆற்றுநேரம் மிகப்பெரிய அளவில் மாசுபட்டுள்ளது.

சாயப்பட்டறைகளில் இருந்து மறைமுகமாக ஆழ்துளை பைப்புகள் பதிக்கப்பட்டு இந்த சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

அதோடு இதுபோன்று பைப் மூலமாக சாயக் கழிவுநீரை வெளியேற்றாத சாயப்பட்டறைகள் அருகிலுள்ள விவசாய நிலங்களில் நேரடியாக இரவு நேரங்களில் இத்தகைய சாயக்களவிநேரை வெளியேற்றுகின்றனர்.

இதன் காரணமாக பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகளும் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரும் மாசுபட்டு ரசாயன நஞ்சு கலந்த நீராக மாறிவிட்டது. இதனைப் பயன்படுத்தும் பொதுமக்களும் கால்நடைகளும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சாயப்பட்டறைகள் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த, ரஞ்சித் தன்மை கொண்ட சாயக்கழிவு நீரை முறைப்படி அதற்குரிய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்தம் செய்து தான் அந்த நீரை வெளியேற்ற வேண்டும், கூடுமானவரை அந்த நீரை மறுசுழற்சி செய்து சம்பந்தப்பட்ட சாயப்பட்டறைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர வெளியில் விடக்கூடாது என்பது சட்ட விதி.

ஆனால் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து ரசாயனம் கலந்த சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதால் கூடுதல் செலவு ஆகின்றன என்ற அடிப்படையில், பணம் சம்பாதிக்கும் ஒரே குறிக்கோளோடு சாயப்பட்டறை நடத்தும் உரிமையாளர்கள் அந்த செலவை செய்ய மனம் இல்லாமல் தங்களின் பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயனம் கலந்த சாயக் கழிவு நீரை காவேரி ஆற்றிலும் அருகில் உள்ள நிலம் மற்றும் நீர் நிலைகளிலும் அப்படியே விடுகின்றனர்.

இதன் காரணமாக செலவு இல்லாமல் மாதம் தோறும் பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் இவர்கள் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் என்ற கொள்கையோடு வாழ்ந்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களோ, கால்நடைகளோ எவ்வாறு எக்கேடு கெட்டுப் போனால் என்ன… தங்களின் குடும்பம் செல்வ செழிப்போடு இருந்தால் போதும் என்ற ஒரு நல்ல உயரிய நோக்கத்தோடு இந்த சாயப்பட்டறை உரிமையாளர்கள் உள்ளனர்.

இவர்களின் லாப நோக்கத்திற்காக அப்பாவி பொதுமக்களும், ஏதும் அறியாத கால்நடைகளும் பாதிக்கப்பட்டு நோய் நொடிகளுக்கு ஆளாகி தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து நோயாளிகளாக நடைபிண வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இது பற்றியெல்லாம் இந்த சாயப்பட்டறை உரிமையாளர்கள் நன்கு தெரிந்திருந்த போதும், பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக உள்ள இவர்கள் பொதுமக்களின் நலன்கள் குறித்து கண்டு கொள்வதில்லை.

கடந்த சுமார் 20 ஆண்டு காலமாக இந்த பிரச்சனை இருந்து வரும் நிலையில், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொதுமக்களை, கால்நடைகளை பாதிக்கும் இந்தப் பிரச்சனைகள் குறித்து அவர்களும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாக பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளது பொதுமக்கள் தான்.

முறைப்படி சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் லாப நக்கத்தோடு சாயப்பட்டறைகளை நடத்தி வரும் இவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். இவர்களின் பணம் சம்பாதிக்கும் ஆசைக்கு, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதி பொதுமக்கள் தான் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

குமாரபாளையத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்று ஒரு அலுவலகம் உள்ளது. அங்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியாக செல்வகணபதி என்பவர் பணியில் உள்ளார். இந்த செல்வ கணபதியும் இவருக்கு கீழ் பணியாற்றும் உதவி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் மற்றும் அலுவலகப் பணியாளர்களும், நல்ல செல்வ செழிப்போடு இருக்கின்றனர்.

பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியில் செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் பொது மக்களை கடுமையாக பாதிக்கும், ரசாயனம் கலந்த கல்வி நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக காவிரி ஆற்றிலும், நீர் நிலைகளிலும் வெளியேற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சாயப்பட்டறைகள் மீது எந்த ஒரு கடும் நடவடிக்கை எடுக்காமல், இவை அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.

இந்த வாரியா அலுவலகத்திற்கு பொதுமக்கள், சமூக அமைப்புகள், செய்தியாளர்கள் என பல தரப்பினரிடம் இருந்து புகார்கள் சென்ற வண்ணம் இருக்கும் நிலையில், அவைகளை கண்டு கொள்ளாமல் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் அவர்களுக்கு ஆதரவாக அமைதி காத்து வருகிறது குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகம்.

மாசுக்கட்டு வாரியத்தில் ஆதரவும், ஆசியும் தங்களுக்கு உள்ளது என்று கூறிக்கொண்டு இது குறித்து கேள்வி எழுப்பும் நபர்களை அவர்கள் தைரியத்தோடு மிரட்டி வருகின்றனர்.

சமீபத்தில் கடந்த ஒரு வார காலமாக பள்ளிபாளையம் பகுதியில் மிக பெரிய அளவில் சாயக் கழிவுநீர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் பொதுமக்களும், சமூக அமைப்புகளும் பத்திரிக்கை, ஊடகங்களும் அதனை வெளி கொண்டு வந்த நிலையில், சில சாயப்பட்டறைகளுக்கு சென்று நடவடிக்கை எடுப்பது போல் ஒரு கண்துடைப்பு நாடகத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செய்துள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சாயப்பட்டறைகளில் ஆய்வு நடத்திய நிலையிலும், அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத சாயப்பட்டறைகள் ஆய்வு செய்த நாட்களிலும் கூட சாய கழிவுநீரை வெளியேற்றி வந்தது என்பதுதான் வேடிக்கை.

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள், நிலத்தடி நீர்கள், விவசாய நிலங்கள் இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நீரை பயன்படுத்தும் பொதுமக்களும், கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த அவல நிலைக்கு தீர்வு காண தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசும், குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள ஆளுங்கட்சி எம்எல்ஏவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கைகூப்பி வேண்டுகோள் வைக்கின்றனர்.

இவர்களுக்கு யார் மணி கட்டுவது, நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேடிக்கை பார்க்கும் காரணம் என்ன…? இந்தப் பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன.

புதிய அரசு பொதுமக்களை சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.